அரசியல்உள்நாடு

நாங்கள் போராடுகிறோம் – நிகழ்ச்சி நிரலை கைவிட மாட்டோம் – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களைப் பின்னோக்கித் தள்ளவோ அல்லது முடக்கவோ ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘REBUILDING SRI LANKA’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்த நாடு படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் வேளையில், இந்தச் சூறாவளியை எதிர்கொள்ள நேரிட்டது.

இருப்பினும், இதன் மூலம் அரசாங்கம் எவ்விதத்திலும் தனது பொறுப்புகளில் இருந்து நழுவிக்கொள்ள வேண்டியத் தேவை இல்லை என ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

“நாங்கள் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரலை (Agenda) கைவிடாமல், இந்த அனர்த்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்துத்தான் நாங்கள் போராடுகிறோம்” என ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

“தேவைப்பட்டால் இந்த அனர்த்தத்தின் மீது பல பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு எமக்கு இருந்தது.

வரலாற்றில் நாங்கள் அவ்வாறுதான் பயணித்தோம். 30 ஆண்டுகளாக அனைத்து அழிவுகளுக்கும் யுத்தத்தையே காரணமாகக் காட்டினார்கள்.

அவ்வாறான ஒரு நிலையே எமக்கு இருந்தது. சில தொற்றுநோய் நிலைமைகளை இந்த அழிவுகளுக்கான போர்வையாக மாற்றிக் கொண்டார்கள்.

எமது வேலைத்திட்டத்தைப் பின்னோக்கித் தள்ளவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ இதனைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற தீர்மானத்திற்கு நாங்கள் வந்துள்ளோம்.” என்றார்.

இதேவேளை, டித்வா சூறாவளி காரணமாக 24 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 6,000 வீடுகள் இழக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அனர்த்தங்கள் காரணமாக சுமார் 110,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், வீடுகளுக்குச் சேதம் ஏற்படாத போதிலும், அபாயகரமான நிலை காரணமாக மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள சுமார் 10,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

‘பாதுகாப்பான நாடு – சுபீட்சமிக்க நாடு’ என்ற தொனிப்பொருளில் 72 ஆவது தேசிய தின வைபவம்

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

editor

சீமெந்தின் விலை ரூ.1,200 ஐ கடந்தது