அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர, கனரக வாகனங்களுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளிடையே இடம்பெறும் போர்களைத் தடுக்கும் நோக்கில், ஜனாதிபதி ட்ரம்ப் நாடுகள் மீது அதிக வரிவிதிப்பு மற்றும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நுகர்வோரான இந்தியா, ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறிய ட்ரம்ப், இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்தார்.
உருக்கு மற்றும் அலுமினியம் முதல் சில இலத்திரனியல் பொருள்கள் வரை பல பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரை வரிகளை விதித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில், ‘நவம்பர் முதலாம் திகதி முதல், பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிகளவில் கனரக வாகனங்களை இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளை இந்நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
-யாகூ நியூஸ்