முதன்மையாக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நோக்கும் போது, நாட்டிற்கும், குடிமக்களுக்கும் வீடு சார்ந்த குடும்ப அலகுகளுக்கும் செல்வம், வளங்கள் மற்றும் பணம் அத்தியவசியமான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன.
இதற்குப் பொருத்தமான கொள்கை முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டைந்த திட்டங்களாகும். இது பல அம்சங்களைக் கொண்டமைந்துள்ளன.
இதில் உள்ளோர் அதாவது செல்வந்தர்கள் தமது வளங்களை மேலும் பெருக்கி முன்னேறிக் கொண்டு மேலே செல்லச் செல்ல, மறுபுறம்
சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள இல்லாதோர் மேலும் மேலும் கீழ் நோக்கிச் செல்லும் நிலை காணப்படுகின்றன. மனிதத்தை முதன்மைப்படுத்தும் மனிதாபிமான முதலாளித்துவ கொள்கையையே ஐக்கிய மக்கள் சக்தி பின்பற்றுகிறது.
தேவை மற்றும் விநியோகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கும் நல லிபரல் கொள்கையோடு எம்மால் உடன்பட முடியாது.
முதலாளித்து கொள்கையை முன்னெடுக்கும் போது அதனால் உருவாக்கப்படும் முரண்பாடுகள் மற்றும் சமத்துவமின்மை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு வரையறுக்கப்பட்ட அரச தலையீடு அவசியம்.
இந்த இடைவெளியை குறைப்பதற்கு நலன்புரித் திட்டங்கள், நலன்புரி அரசு இன்றியமையாதது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய இராச்சியத்திலும் கூட நலன்புரி அரசே காணப்படுகின்றது. அங்கேயும் சுகாதாரமும் கல்வியும் இலவசமான ஒன்றாகவே காணப்படுகின்றன.
ஒரு நாட்டிற்கு சமூகப் பாதுகாப்பு வலை தேவையாகும். முதலாளித்துவம் மற்றும் நவ லிபரல் கொள்கைகளால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வரையறுக்கப்பட்ட அரச தலையீடு கட்டாயம்.
நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமானால், அரசாங்கத்தால் வெற்றிகரமாக தொழில்முயற்சியாண்மைகளை கொண்டு நடத்த முடியாது என்பதனால், தனியார் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை வழங்கி, தனியார் தொழில்முயற்சியாண்மைகள் மூலம் செல்வத்தை உருவாக்கும் புதிய போக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
உலகம் தொழில்நுட்ப ரீதியாக வேகமாக முன்னேறி வருவதால், ஒரு நாடாக நாமும் அந்த தொழில்நுட்ப முறைகளை உள்வாங்கி தகமைத்துக் கொள்ள வேண்டும்.
உலகில் சம்பிரதாயபூர்வமாக காணப்பட்டு வந்த தொழில்கள் மறைந்து போய், அவை வழங்கிய சேவைகள் இன்று ஸ்மார்ட்போன்களால் ஆற்றப்பட்டு வருகின்றன. சேவைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.
ஒருவரில் தங்கி இருக்கும் நிலையில் இருந்து விடுபட்டு சுயமாக பல சேவைகளை தாமாகவே பெற்றுக் கொள்ளும் நிலைக்கு இன்று வந்துள்ளோம்.
இந்தப் புதிய போக்குகளுக்கு மத்தியில் நமது பொருளாதாரக் கொள்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மனிதாபிமான முதலாளித்துவம், சமூக சந்தைப் பொருளாதாரம், சமூக ஜனநாயகம், அனைத்து இனக்குழுமங்களையும் உள்வாங்கிய முற்போக்கு தேசியவாதம் மற்றும் வரையறுக்கப்பட்ட அரச தலையீடு ஆகிய கோட்பாடுகளைக் கொண்டமைந்த நடுத்தர பாதையை நாட்டின் மாற்றுப் பாதையாக, மூன்றாவது பாதையை சரியாக இந்நாட்டில் நாம் ஸ்தானப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சகல தேர்தல் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கான ஓரு நாள் செயலமர்வு இன்று (23) பத்தரமுல்லை மொனார்க் ஹோட்டலில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கலாநிதி ஹர்ஷா டி சில்வா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய திட்டம், நவ லிபரல் கொள்கையின் அடிப்படையில் அமைந்த ஒன்றல்ல, மாறாக மனிதாபிமான முதலாளித்துவத்தின் சமூக ஜனநாயக கொள்கையின் பிரகாரம் அமைந்த நலன்புரி அரசின் வெளிப்பாடாகும்.
அரச தலையீட்டின் மூலம் இலவச சுகாதாரப் பராமரிப்புக்கு பெற்றுத்தரப்படும் மிகப்பெரிய பக்க பலம் இதுவாகும். இதனை தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் சிலர் ரகசிய உளவுத்துறையால் நமது நாட்டில் மேற்கொள்ளப்படும் சதி என்று முன்னர் அழைத்தனர்.
இன்று, இது பெரும் பொய்யாகிப்போய்விட்டது. சமூகத்தை நாம் பிரமிட்டாக எடுத்துக் கொண்டால், அதன் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களை, குறிப்பாக கடும் வறுமையில் உள்ளோரை எப்போதும் நாம் பாதுகாக்கப்பட வேண்டும்.
அவர்களை காப்பது அரசின் கடமையாகும். இந்த பாதையில் தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
