பண மோசடி தொடர்பிலான பல்வேறு சம்பவங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (11) கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இத்தமல்கொடவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது.
சந்தேக நபர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி ஊழியர் சேமலாப நிதி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதற்காக குறித்த சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றம் 7 பிடியாணைகளைப் பிறப்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நான்கு பிடியாணை உத்தரவுகளும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு பிடியாணைகளும், தங்காலை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை ஒன்றும் சந்தேகநபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் ஒரு நடிகை என்றும், நீதியைத் தவிர்க்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சில வழக்குகளுடன் தொடர்புடைய பணத்தை ஏற்கனவே தனது கட்சிக்காரர் செலுத்திவிட்டதாகவும், குறித்த வழக்கு விசாரணைகளை தொழில் திணைக்களம் மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க, சந்தேக நபருக்கு எதிராக உள்ள 7 வழக்குகளுக்கு அமைய, ஒவ்வொரு வழக்கிற்கும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு முறைப்பாடுகள் தொடர்பில், கட்டணம் செலுத்தப்பட்ட அறிக்கைகளை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சந்தேக நபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.