அரசியல்உள்நாடு

தோல்வி கண்ட அனர்த்த முகாமைத்து திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டில் துல்லியமான, திட்டவட்டமான, வினைத்திறனாக அனர்த்த முகாமைத்துவ திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவில்லை.

அவ்வாறு அமைந்து காணப்படவுமில்லை. அனர்த்த முகாமைத்துவ பிரிவும் இன்று சுனாமிக்கு அகப்பட்டுபோயுள்ளது. அனர்த்த முகாமைத்துவதற்கு குறிப்பிட்ட நிறுவனமோ, வழிகாட்டுதல் தத்துவங்களோ, செயற்பாடுகளோ அல்லது செயற்றிட்ட வரைபடமோ எதுவும் இல்லை.

நாட்டில், NBRO, GSMB போலவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கட்டிடங்கள், மண் சரிவுகள், வெள்ளம், சூறாவளி போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்கள், முறையான திட்டமிடலுடன் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவ திட்டம் வகுக்கப்பட்டு தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் மட்டங்களிலும் இதன் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

இதனை தனி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டம், இப்பாகமுவ பகுதியில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

இச்சமயம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் கீழ், விசேட பயிற்சி பெற்ற கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

இந்த துயரங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு பலவீனமடைந்துள்ள நாட்டின் இடர் முகாமைத்துவ பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும்.

சுனாமி ஏற்பட்டு 21 ஆண்டுகள் ஆகியும், அடிக்கல் நாட்டப்பட்ட புத்தளம் டாப்ளர் ரேடார் கட்டமைப்பு இன்னும் நிறுவப்படவில்லை.

இதனை விரைவில் ஸ்தாபித்துத் தருமாறு ஜப்பான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைந்து கூட்டுங்கள். நாம் எமது ஆதரவைத் தருவோம்.

தோல்வி கண்ட அனர்த்த முகாமைத்து திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெரும் சேதங்களையும் இழப்புக்களையும் சந்தித்துள்ள மக்களுக்கு குறிப்பிட்ட மற்றும் மக்கள் நிரந்தரமாக மீள்வதற்குத் தேவையான ஏற்பாடுகளுடன் அமைந்த நிவாரண பொறிமுறை அமைந்து காணப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் கொடுக்கும். இந்தப் பேரழிவால் பில்லியன் கணக்கான டொலர்கள் சேதம் ஏற்பட்டுள்ளன.

சேதத்திற்கு ஏற்ற இழப்பீடுகள் அரச தரப்பில் இல்லாமையால், சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அவசரமாக நடத்த வேண்டும். இந்த விடயத்தை பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் முன்வைத்துள்ளேன்.

தாமதமின்றி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும். எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி போதம் காட்டாது இதற்குப் பூரண ஆதரவைத் தரும்.

இச்சமயம், அரசியல் ஆதாயம் தேடாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கி, மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்துவது அவசியமாகும். அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுப்பது முன்னுரிமையான விடயமாக அமைந்து காணப்படுகின்றது.

இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் பந்தயமாக பயன்படுத்துவதற்குப் பதிலாக, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அவசரமாக கூட்டி, வலுவான அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தவறுகளையும் குறைபாடுகளையும் சரிசெய்து கொண்டு புதிய பயணத்தை முன்னெடுக்க வேண்டும். அழிவைச் சந்தித்துள்ள நமது நாட்டு மக்களுக்காக இதனைச் செய்தே ஆக வேண்டும். இதற்கான ஆதரவை நாம் தருவோம்.

அவ்வாறே நாட்டுக்காக துன்பப்பட்ட மக்களுக்காக எதிர்க்கட்சி இயலுமான உதவிகளைச் செய்யும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண நியமனம்

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

புதிய பாராளுமன்ற உறுப்பினராக N.T.M தாஹிர் சத்தியப்பிரமாணம்!

editor