அரசியல்உள்நாடு

தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை – உரிய நேரத்தில் மாகாண சபை தேர்தல் – அமைச்சர் சந்தன அபேரத்ன

எந்த தேர்தலையும் பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாதென பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளுராட்சி சபை அமைச்சர் சந்தன அபேரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் வரை மாகாண சபை மட்டத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, தமிழரசுக் கட்சி எம்.பி சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சாணக்கியன் எம்.பி. தமது கேள்வியின் போது ,பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உடனடி நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மாகாண சபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடத்தப்படும் என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடத்தலாம் என ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்த வகையில் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பினார் .

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

எந்த தேர்தலையும் பிற்போடும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. அரச நிர்வாக கட்டமைப்புக்கு அமையவே, மாகாண சபைகள் இயங்குகின்றன.

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் வரை மாகாண சபைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமலிருக்க முடியாது. இதனால் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பிற்காக எதிர்க்கட்சி முன்நிற்கும் – சஜித் பிரேமதாச

editor

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்தினை மூடத் தீர்மானம்

போதைப்பொருள் வர்த்தகம் – நால்வர் கைது