அரசியல்உள்நாடு

தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நாட்டின் தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், தேயிலைக் கொழுந்துகளின் தரம் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், புதிய சர்வதேச சந்தை வாய்ப்புகளை கண்டறிதல் ஆகிய விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தேயிலைத் தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றிற்கு சாதகமான தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் கொள்ளளவு அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், தேயிலை மீள் நடவு தொடர்பில் தொழில்துறையினர் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தேயிலை பயிர்ச்செய்கை தொடர்பில் முறையான தரவு கட்டமைப்பொன்றை தயாரித்தல் உள்ளிட்ட தேயிலை பயிர்ச்செய்கை குறித்து,பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம் பற்றியும், அதனை முறையாக கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், தேயிலை உற்பத்தியின் தரத்தை குறைக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.

தேயிலைத் தொழிற்துறையினர், ஏற்றுமதியாளர்கள், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான தளத்தை உருவாக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் உரிய அமைச்சுடன் கலந்துரையாடி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதன் ஊடாக, தேயிலைத் தொழிற்துறையில் எழும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, விரைவான மற்றும் வினைத்திறனான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடலுக்கு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை அழைத்ததற்காக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம், அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், டபிள்யூ.எம்.டி.டி. விக்ரமசிங்க, இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஆர்.கே. ஒபேசேகர ஆகியோருடன் சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், உள்நாட்டு இறைவரி திணைக்களம், மற்றும் திறைசேரியின் அதிகாரிகள், தேயிலைத் தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

ஆசிரியர் சேவை சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

திலினியின் பண மோசடி விவகாரம் : பிரபல சிங்கள நடிகையிடம் விசாரணை

அண்ணனும் தம்பிக்கும் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டது