அரசியல்உள்நாடு

தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி

தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் அண்மையில் (19) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டு குழுவின் முன்மொழிவுகளுடன் பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கணக்காய்வு சட்டத்தின் 34 ஆம் பிரிவிற்கு அமைய இந்த விடயம் கருத்திற்கொள்ளப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா வெளிநாடு சென்றுள்ளதால் அந்தக் குழுவின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) ரவூப் ஹகீம் தலைமையில் அண்மையில் (19) கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜி.எச்.கே. தர்மபால உள்ளிட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சிலரும், வரவுசெலவுத்திட்ட திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் இதில் கலந்துகொண்டனர்.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் நிலவும் சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், வெளிநாட்டுத் திட்டங்கள் மற்றும் அரச தொழில்முயற்சிகள் உள்ளிட்ட சுமார் 2000 நிறுவனங்களை கணக்காய்வு செய்யும் கணக்காய்வு அலுவலகத்திலுள்ள பணியாளர் பற்றாக்குறை, புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. பட்டய கணக்காளர் மட்டத்திலான உயரதிகாரிகள் சுமார் 35 பேர் கணக்காய்வு அலுவலகத்தில் பணியாற்றுவதாகவும் தற்போதைய சம்பள அளவுத்திட்டத்தில் கணக்காளர் உயர் பரீட்சையில் சித்தியடைந்த அதிகாரிகளை தக்கவைத்துக்கொள்வதில் சிக்கல் உருவாகியுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.

அத்துடன், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கீழ் மாகாண மட்டத்தில் அலுவலகக் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதன் முக்கியத்துவம், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்ப அங்கங்களை பயன்படுத்தி குறைந்த பணியாளர்களைக் கொண்டு, வினைத்திறனை அதிகரிப்பதன் சாத்தியக்கூறு போன்றன தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன், சம்பிக்க ஹெட்டியாராச்சி மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related posts

போதைப் பொருள்களுடன் 455 பேர் கைது

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

அரசாங்கம் சில சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

editor