உள்நாடுபிராந்தியம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

நேற்று (ஜூலை 18) காலை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 1:30 மணியளவில் பொலிஸ் விசேட படையின் புலனாய்வு அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிளைக் கண்டு, மூத்த பொலிஸ் அதிகாரிக்கு தகவல் அளித்ததாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் இணைக்கப்பட்டிருந்த இலக்கத் தகடு ஒரு காருக்கு பதிவு செய்யப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு கைரேகைத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 46 வயது சுதத் குமார் காயமடைந்தார். அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிசிடிவி காட்சிகளின்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எந்த இடையூறும் இல்லாமல் நடந்து சென்று, காரின் சாரதி இருக்கையில் இருந்த சுதத் குமார் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டார்.

இதில் இரண்டு குண்டுகள் அவரது தோள்பட்டை மற்றும் வயிற்றில் பட்டன. மற்றவை காரைத் தாக்கின. தாக்குதலுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

சம்பவ இடத்திற்கு வந்த ஒருவர், காயமடைந்த சுதத் குமாரை அதே காரில் ஏற்றி களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்தார். சுதத் குமார் நாளாந்த கடன் வழங்குபவர் எனவும், அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை எனவும், யாராலும் அச்சுறுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில், சுதத் குமார், “வெலே சுதா” என்று அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் உறவினரை மணந்து, சமீபத்தில் விவாகரத்து செய்தவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் படோவிட்ட அசங்கவின் நெருங்கிய உறவினர் எனவும், கொஸ் மல்லியின் தரப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுராத ஹேரத் தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Related posts

SLPP இனது அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தம்

அரச ஊழியர்களை பணியிடங்களுக்கு அழைப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை வெளியிடப்போகும் மைதிரி!