உள்நாடு

தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனம்!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள்  மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், 2023/2024 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று (01) ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் பீடாதிபதி அஷ்- ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸின் முன்னிலையில் இடம்பெற்றது.

நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

உபவேந்தர் தனது உரையில், பல்கலைக்கழக கல்வியைத் தொடர இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்துக்கு புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் உந்து சக்தியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் வழங்கும் இலவசக் கல்வியானது நாட்டில் சிறிய ஒரு குழுவினருக்குக் கிடைக்கும் சலுகையாகும்.

இதனை பொறுப்புடன் பயன்படுத்தி நாடு எதிர்பார்க்கும் மாற்றத்தின் பங்காளிகளாக மாணவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது அனைத்து சமூக மாணவ பிரதிநிதிகளையும் சமமாகக் கொண்டுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம் என்றும் இங்கு சகல மாணவர்களும் பாரபட்சமற்ற முறையில் சமமாகப் பார்க்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

தென்க்கிழக்குப் பல்கலைக்கழகம் இரம்மியமான இடத்தில் அமைந்துள்ளது என்றும் அத்துடன் மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் அத்தனையும் இங்குள்ளதாகவும் தெரிவித்தார்.

மாணவர்கள் ஆர்வத்தோடு கல்வி நடவடிக்கைகளிலும் விரிவுரைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும். அதேவேளை, பல்கலைக்கழக விதிகளையும் நடத்தை முறைகளையும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

வன்முறைகளில் இருந்தும் தேவையற்ற குழப்பங்களில் இருந்தும் ஒதுங்கியிருப்பது மாணவர்களில் எதிர்கால முன்னேற்றத்துக்கு உறுதுணையாக அமையும் என்றும் கூறினார்.

பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வியைத் தொடர ஆரம்பிப்பது முதல் பெற்றோர்கள் கொண்ட பிள்ளைகள் மீதான கண்காணிப்புகளை பல்கலைக்கழக கல்வி முடியும் வரை இரட்டிப்பாக்கி பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பகிடிவதை மாணவர்களின் வாழ்வை சீரழித்துள்ளதாகவும் அரசு அதற்கு எதிராக இறுக்கமான சட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் இந்த விடயத்தில் மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வின் வரவேற்புரையை நிகழ்வின் இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.எஸ்.அஹமட் ரியாத் ரூலி நிகழ்த்தினார்.

நிகழ்வின்போது இஸ்லாமியக் கற்கைகள்  மற்றும் அரபுமொழி பீட தினைக்களகங்களின் தலைவர்களான பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். நஹ்பீஸ் மற்றும் கலாநிதி ஏ.எம். றாசீக் ஆகியோர் தங்களது திணைக்களங்களின் கற்கை பொறிமுறைகள் தொடர்பிலும் குறித்த பகுதிகளில் கற்பதனூடாக பெறக்கூடிய அனுகூலங்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறினர்.

இஸ்லாமியக் கற்கைகள்  மற்றும் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்- ஷெய்க்  எம்.எச்.ஏ. முனாஸ் தனது உரையில், பீடம் கடந்து வந்த பாதைகள் தொடர்பிலும் மாணவர்களுக்கு உள்ள வரப்பிரசாதங்கள் சம்பந்தமாகவும் எடுத்துரைத்தார்.

இங்கு இளங்கலை மாணவர் வழிகாட்டி நூல் ஒன்றும் நிகழ்நிலை ஊடாகக் வெளியீடு செய்யப்பட்டது.

அதேவேளை இரண்டாம் ஆண்டு மாணவர்களால் பகிடிவதைத் தடுப்பு அறிவிப்பு ஒன்றும் பிரகடனப்படுத்தப்பட்டது வசேட அம்சமாகும்.

இவர்களது பிரகடனத்தில்
2022 மற்றும் 2023 கல்வியாண்டு மாணவர்களாகிய நாங்கள் 2023 மற்றும் 2024 மாணவர்களை உள்ளீர்க்கும் இந்த மகத்தான நாளில் ஜூலை முதலாம் திகதி 2025ம் பின்வரும் உடன்பாட்டை பிரகடனப்படுத்துகிறோம் என்பதை அறிவிப்பதிர் மகிழ்ச்சியடைகின்றோம்.

இங்கு வருகை தந்துள்ள 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ்வித பகிடிவதைகளுக்கும் உட்படுத்தாமல் சகோதர வாஞ்சையுடன் இந்தப் பல்கலைக்கழகத்துக்குள்ளும் வெளிவிலும் அவர்களை நாங்கள் பார்ப்போம் என்று பிரகடனப்படுத்துகிறோம்.

மேலும், முதலாம் வருட மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ புண்படுத்தக் கூடிய எந்தவித நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபடுவதில்லை என்ற உடன்பாட்டை உங்கள் முன் இப்போதே நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

இந்தப் பிரகடனத்தை நாங்கள் எவ்வித அழுத்தமும் இன்றி நாமாகவே எங்கள் தொகுதி மாணவர்கள் சார்பில் தெளிவித்துக் கொள்கிறோம். வரலாற்று முக்கியத்துமிக்க இந்த கைங்கரியத்தை ஏனைய பீட மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் மற்றும்  இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி  அஷ்- ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் ஏனைய பீடாதிபதிகள், பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் என அனைவரும் முன்னிலையிலும் இந்த உடன்பாடை தெளிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.சி.எஸ். ஷதிஹ்பா நன்றியுரையாற்றினார்.

நிகழ்வின்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்டவிரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம், சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்கள் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபார், நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் என பலரும் பங்கு கொண்டனர்.

-பாறுக் ஷிஹான், ஹுதா உமர்

Related posts

எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் திருத்தம்

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் விளக்கமறியலில்