தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறை ஒருங்கிணைத்த “ADIC – இரண்டாம் கட்டத் திட்டம்” தொடர்பான ஆரம்ப செயலமர்வு, 2025 செப்டம்பர் 22 ஆம் திகதி பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான் வரவேற்புரையாற்றியதையடுத்து, கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பதில் பீடாதியும் அரசியல் அறிவியல் துறைத் தலைவருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பார் பிரதான உரையாற்றினார்.
கலாநிதி அப்துல் ஜப்பார் தனது உரையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தபடி, ஆண்டுதோறும் சுமார் 2.6 மில்லியன் மரணங்கள் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படுகின்றன.
இலங்கையிலும் மது, சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதார துறைகளில் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. வருடத்திற்கு சுமார் 50,000 பேர் மது, 20,000 பேர் புகையிலை காரணமாக உயிரிழக்கின்றனர்.
இந்த பிரச்சினையை சமாளிக்க வலுவான அரசுக் கொள்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் அவசியமாகின்றன. இவ்வாறான திட்டங்கள் மாணவர்களுக்கு அறிவும் விழிப்புணர்வும் அளிக்கும் ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சமூகவியல் துறை, உபவேந்தர் மற்றும் ADIC குழுவினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
ADIC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி. சேரம், இலங்கையில் மதுபானம், புகையிலை மற்றும் பிற போதைப்பொருட்களின் பரவல் நிலைமை, சமூகத்தில் ஏற்படும் விளைவுகள், மற்றும் அவற்றை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தேசிய அளவிலான நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ADIC 1987ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, சுகாதாரத்துடன் சமூக மற்றும் பொருளாதார கோணங்களையும் உள்ளடக்கிய முழுமையான தடுப்பு அணுகுமுறையை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) உட்பட பல தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றுள்ள ADIC, தற்போது இலங்கையின் 25 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருவதாகவும், இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் மரணங்களில் 83% அசாதாரண நோய்கள் (NCDs) காரணமாக ஏற்படுகின்றன.
அதற்கான முக்கிய அபாயக் காரணிகள் புகையிலை, மதுப் பயன்படுத்தல், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடற்பயிற்சி குறைவு என சுட்டிக்காட்டினார்.
தினசரி 42 பேர் புகையிலை காரணமாக உயிரிழக்கின்றனர் என்றும், அரசுக்கு வருவாயாக 92.9 பில்லியன் கிடைத்தாலும் சுகாதாரச் செலவு 240 பில்லியனைத் தாண்டுவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், மதுவால் வருடத்திற்கு 237 பில்லியன் ரூபாய் செலவாகி, வருவாய் 165 பில்லியன் ரூபாய் மட்டுமே என்பதும் வலியுறுத்தப்பட்டது.
“புகையிலை, மது போன்றவை மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை; மாறாக, அவை உண்மையான மகிழ்ச்சிக்கு தடையாக உள்ளன. இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் பங்களிப்பு மூலமே ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, ADIC திட்டப் பணிப்பாளர் அமரநாத் தின்னா, திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் எதிர்கால இலக்குகளை விளக்கினார்.
1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ADIC (Alcohol and Drug Information Centre), இலங்கையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தும் முன்னணி நிறுவனம் ஆகும். “போதைப்பொருள் இல்லா ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்” என்பதே அதன் பிரதான நோக்கம்.
- மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரங்கள் : நாடு முழுவதும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் வழியாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.
- இளைஞர்களுக்கான பயிற்சிகள் : பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு கல்வி திட்டங்கள் மூலம் போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
- சமூக அடிப்படையிலான திட்டங்கள் : கிராம மற்றும் நகர மட்டங்களில் சமூக தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை ஈடுபடுத்தி, குடும்ப மற்றும் சமூக நிலைகளில் பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறது.
- ஆராய்ச்சிகள் மற்றும் தரவுகள் : இலங்கையில் போதைப்பொருள் பயன்பாட்டின் நிலை, அதனால் ஏற்படும் சுகாதார, பொருளாதார மற்றும் சமூகச் சவால்களை ஆய்வு செய்து, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு கொள்கை பரிந்துரைகள் வழங்குகிறது.
- சர்வதேச ஒத்துழைப்புகள் : உலக சுகாதார நிறுவனம் (WHO) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது.
- இலங்கையில் மதுவியல், புகையிலை மற்றும் பிற போதைப்பொருள் பிரச்சினை மிகப் பெரும் சவாலாக உள்ளது. இந்த பிரச்சினையை சமாளிக்க மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் திறன்களை மேம்படுத்த இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- பாடத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, போதைப்பொருள் மற்றும் புகையிலை நிறுவனங்கள் யுவர்களை எப்படி குறிக்கோளாக்குகின்றன என்பதையும், அவர்களின் நடைமுறைகளை எதிர்கொள்வதற்கான வழிகளைப் புரிந்து கொள்வதாகும்.
- மூன்றாவது குறிக்கோள், சமூகங்களில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, சமூக அளவில் பங்களிப்பை உருவாக்கும் திறன்களை வளர்ப்பதாகும். மாணவர்கள் இதன் மூலம் வெளிப்படையான திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தலாம்.
இரண்டாம் கட்ட பாடத்திட்டத்தில் 7 அமர்வுகள் உள்ளன, இதில் மெய்நிகர் அமர்வுகள் மற்றும் பரிசீலனை அமர்வுகள் அடக்கம். துறை நிபுணர்கள் வழிகாட்டலுடன் அமர்வுகள் இடம்பெறும் என்றார்.
இங்கு உரையாற்றிய கலாநிதி றிஸ்வான், இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறை மற்றும் இலங்கை ADIC இணைந்து நடாத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி திட்டம் இன்று துஆரம்பிக்கின்றது என்றும் முதற் கட்டத்தில் சுமார் 35–40 மாணவர்கள் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றனர். என்றும்
இந்த திட்டம் மாணவர்களுக்கு புகையிலை, மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகளைப் பற்றி அறிவு மற்றும் விழிப்புணர்வை அளிக்கிறது. எதிர்காலத்தில் அவர்கள் சமூகத்துடன் பணிபுரியும் போது, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
முதற் கட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த பேராசிரியர் ஏ. றமீஸ், பேராசிரியர் எம்.எம். பாஸில், பேராசிரியர் எஸ்.எம். அயூப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இரண்டாம் கட்டம் இப்போது சிறப்பு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. போதைப்பொருள் மற்றும் மது பழக்கம் இன்று இலங்கை மட்டுமல்லாது உலகளாவிய அளவில் ஒரு பெரும் சவாலாக உள்ளது. இதை எதிர்கொள்ளும் திறன் மாணவர்களுக்குள் உருவாக்கப்படுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நிகழ்வின் இறுதியில் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான என். லும்னா நன்றியுரையாற்றினார்.
நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ADIC திட்ட அலுவலர் நிதர்ஷனா மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு, பல்கலைக்கழகத்தின் கல்வி, சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய அத்தியாயமாக மட்டுமன்றி, இலங்கையில் ADIC முன்னெடுத்து வரும் போதைப்பொருள் தடுப்பு இயக்கத்துடன் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
-நூருல் ஹுதா உமர்