பாராளுமன்றத்திற்கு தீ வைப்பதாக வீதிக்கு இறங்கிய கட்சியினர், பொதுச் சொத்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருப்பது நகைப்புக்குரிய விடயமாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய ஜனாதிபதிக்கு, நிதியமைச்சர் என்ற வகையில் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் கணக்காய்வு விசாரணையை நடத்துமாறு நிதியமைச்சின் பரிசீலனை குழு யோசனை ஒன்றை முன்வைத்தது.
எனினும் இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான சூழலில் நீதி அனைவருக்கும் சமம் என்ற காரணத்தை காட்டிலும் இது நேரடியான அரசியல் பழிவாங்கல் செயற்பாடு என்பதை காணமுடிகின்றது.
ஜனாதிபதி அண்மைக்காலத்தில் பல விஜயங்களை மேற்கொண்டிருந்தார். அந்த விஜயங்களில் சந்தித்து கலந்துரையாடிய நிறுவனங்களுக்கு ட்ரில்லியன் அளவிலான வரிச் சலுகையினை வழங்கியிருந்தார்.
இதனை எவ்வாறு பார்க்க முடியும். ஜனாதிபதி தமது தனிப்பட்ட விஜயத்தில் பொதுச் சொத்தை பயன்படுத்த வில்லையா?
1982 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானுக்கு சொந்தமான கப்பலுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டை எதிர்கொண்ட கட்சியாகும் (ஜே.வி.பி), 1987 – 1989 வரையான காலப்பகுதியில் விசாலமான சொத்துக்களை அழித்தமை குறித்த குற்றச்சாட்டை பெருமையாக ஏற்றுக்கொண்ட கட்சியினராக அவர்கள் உள்ளார்கள்.
இறுதியாக 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றை தீ வைப்பதற்காக வீதிக்கு இறங்கிய கட்சி, பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதியை கைது செய்திருப்பது பாரிய நகைச்சுவைக்குரிய விடயமாகவே கருதமுடியும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.