அரசியல்உள்நாடு

துப்பாக்கி சூட்டில் மரணமானவருக்கு நீதி வேண்டும் – சாணக்கியன் எம்.பி

முன்னாள் அமைச்சரின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிசூட்டில் மரணமானவருக்கு நீதி வேண்டும் என சாணக்கியன் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பிரசன்னத்துடன் நேற்று (13) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு சார் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பல விடயங்களை தீர்வு காணும் பொருட்டு முன்வைத்தார்.

முதலாவதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம் உள்ள காணியினை விடுவிக்குமாறு கோரினார்.

அதற்கு பதிலளித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், அடுத்த வருடம் புதிய கட்டடம் பொலிசாருக்கு உரித்தான காணியில் அமைத்தன் பின்னர் குறித்த காணியினை விடுவிப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடியில் பொதுத் தேவைகளுக்கான கட்டிடங்கள் அமைப்பதற்கான அரசகாணி இல்லை எனவும், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை அமைந்துள்ள காணியினை பொதுத்தேவைகளுக்காக வழங்குமாறும், விசேட அதிரடிப்படை முகாமினை பொலிஸ் காணியினுள் மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

பொலிஸ் நிலையமும், விசேட அதிரடிப்படை முகாமும் ஒன்றாக அருகில் இருக்கமுடியாது என அமைச்சர் தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்குரிய காணியில் மூன்று ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியினை அரச பொதுத்தேவைகளுக்கு வழங்குவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

மேலும், வவுணதீவுப் பிரதேசத்தில் உள்ள தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியில் விசேட அதிரடிப்படை முகாம் இருக்கின்றது.

அக்காணியினையும் விடுவித்து மாவீரர்களின் வணக்கம் செலுத்துவதற்கு ஏற்ப மாற்றியமைத்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அக்காணியினுள் நிரந்தரக் கட்டிடங்கள் அமைத்துள்ளோம்.

அவ்வாறு துயிலுமில்லம் இருந்ததிற்கான அடையாளங்கள் இல்லையென விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரி தெரிவித்தார்.

முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் குறித்த காணியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒருபகுதியினை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அமைச்சர் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு காணியின் ஒருபகுதியினை விடுவிப்பதாக தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்பங்கேணியில் பிரதேச செயலகத்திற்கு உரித்தான தொழிற்பயிற்சி அதிகார சபையில் 2007ஆம் ஆண்டிற்குப் பின்னர் இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் காவலரண்கள் போன்றன மாறி மாறி 2021ம் ஆண்டு வரையும் இருந்துள்ளது.

இதனுடைய மின்சாரப்பட்டியல் செலுத்தாமல் குறித்த காலப்பகுதிக்கு மின்சாரக்கட்டணமாக 896236.03 நிலுவையாக உள்ளது. இக்கட்டணத்தினை செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

பொலிஸ் காவலரண் இருந்த காலப்பகுதிக்குரிய கட்டணத்தினை செலுத்துவதாகவும், மீதியினை மின்சார சபையுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை பெறுமாறும் அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

ஆரையம்பதி பிரதேச செயலகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொலிஸ் நிலையத்தினை அமைக்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து அடுத்து வரும் வருடங்களில் அமைப்பதாகவும் உறுதியளித்தார்.

அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற முன்னாள் பிரதி அமைச்சரின் வீட்டின் முன்னால் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டினால் இறந்தவர் மற்றும் மண்டூரில் துப்பாக்கிச் சூடு நடாத்தி கொல்லப்பட்ட மதிதயன் ஆகியோருக்கும் காணி சீர்திருத்த ஆணையாளர் விமல் மீது மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு நடாத்தியவர்களை இனம்கண்டு நீதியினை சரியான முறையில் நிலைநாட்ட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் கூறுகையில், கடந்த அரசாங்கங்களில் இவ்வாறு பல கொலைகள் நடைபெற்றுள்ளன.

ஆனால் நாம் எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி பூரண விசாரணைகளை மேற்கொண்டு நீதியினை நிலைநாட்டுவதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

பொலிஸ் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. நாம் எந்த பேதமுமின்றி நீதியினையும், சட்ட ஒழுங்குகளையும் நிலைநாட்டுவதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இந்த மண்டூர் மதிதயனின் கொலைக்கு நீதியினை நிலைநாட்டுவதற்காக குறித்த சம்பவம் தொடர்பாக மீள் விசாரணை செய்து நீதியினை நிலைநாட்டுவதற்கு விசாரணையினை ஆரம்பிக்குமாறு வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, கிழக்கு மாகாண ஆளுனர் ஜெயந்தலால் இரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், இளையதம்பி சிறிநாத், ஞாணமுத்து சிறிநேசன் மற்றும் கந்தசாமி பிரபு, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

‘ரணிலுக்கு உலகமே அஞ்சும்’ – வஜிர

கண்டி கட்டட விபத்து – மேலும் சிலர் தற்காலிகமாக வெளியேற்றம் [VIDEO]

சுதந்திர தின பிரதான வைபவத்தினை புறக்கணிக்கிறார் பேராயர் மெல்கம் ஆண்டகை