உள்நாடு

திலினி பிரியமாலிக்கு பிணை – முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல்

திலினி பிரியமாலிக்கு பிணை

ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலியை, இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் ஆஜராக சந்தேகநபர் திலினி பிரியமாலி ஹோமாகம நீதிமன்றத்திற்கு வந்தபோது, சந்தேகநபருக்கு வழங்கப்பட இருந்த அழைப்பாணை ஒன்றை, நீதிமன்ற கடமையில் ஈடுபட்டிருந்த அழைப்பாணை விநியோகிப்பர் வழங்க முற்பட்ட போது சட்டவிரோதமாகத் தடுத்தல், குற்றவியல் மிரட்டல், கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அழைப்பாணை விநியோகிப்பவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இது தொடர்பாக, ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசுந்தர ஜூலை 14 ஆம் திகதி உத்தரவு ஒன்றை பிறப்பித்து, சந்தேகநபரை ஜூலை 15 ஆம் திகதி ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி, சந்தேகநபர் தொழிலதிபர் திலினி பிரியமாலி வாக்குமூலம் அளிக்க ஹோமாகம பொலிஸ் தலைமையகத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (28) முன்னாள் கடற்படைத் தளபதியைக் கைது செய்தனர்.

அதன்படி, முன்னாள் கடற்படைத் தளபதி இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Related posts

ரணிலுக்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு

காசா மருத்துவமனை தாக்குதல் – சுமந்திரன் கண்டனம்.

விஷேட குழுவை அமைத்து மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினைகளை தீருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor