உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் – வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்!

திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் கடந்த வியாழக்கிழமை மாதாந்த அமர்வு நடைபெற்றது. 

இந்த அமர்வில் தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களது இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் அடையாளங்களினையும் மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதாகத் தெரிவிக்கின்றபோதும் அது சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குக் கட்டுப்பட்டதாகவும் ஒத்தோடுவதாகவுமே உள்ளது.

அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தவிசாளரினால் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

மேலதிகமாக இந்த விடயம் தொடர்பில் அவசர தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினர் இ.கஜிபனினால் தவிசாளரிடம் கோரிக்கை ஒன்றும் சபையில் முன்வைக்கப்பட்து.

சபையின் இத் தீர்மானத்திற்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்டாக தவிசாளருடன் வாதிட்டனர்.

பின்னர் இந்தத் தீர்மானத்தில் அரசாங்கம் பௌத்த சிங்கள பேரினவாதத்தினை முன்னெடுக்கிறது என்ற கருத்தை நீக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பிரதேச சபைக்கு புத்தர் சிலை பற்றிய தீர்மானத்தினை முன்வைக்க முடியாது.

இச்சபை அபிவிருத்திக்கான அலகு. ஆகவே வலிகாமம் கிழக்கிற்கு உட்பட்ட அபிவிருத்தி விடயங்களை மட்டுமே பார்க்கவேண்டிய சபை எதற்காக இங்கே புத்தர் சிலை பற்றி முன்வைக்கிறீர்கள் எனவும் கடுமையாக தேசியமக்கள் சக்தியினர் வாதிட்டனர்.

இந்நிலையில், பிரதேச சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் ஒருமித்து அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றக்கூடாது எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த விகாரை விடயத்தில் நடந்துகொண்ட விடயத்தினை எதிர்த்தனர்.

வரலாற்று ரீதியில் மாறிமாறி வரும் அரசாங்கங்களின் இனவாத நீட்சியே நடக்கின்றது என சகல தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் வாதிட்டனர். இந் நிலையில் சபையில் அமளிதுமளி நீடித்தது.

சபையை அமைதிப்படுத்திய தவிசாளர், பொலிஸார் மீளவும் பேரினவாத நோக்கில் அமைக்கப்பட்ட பௌத்த சிலையை அகற்றிவிட்டு மீண்டும் பக்குவமாக அரசு நிறுவியது. இராணுவம் பாதுகாப்பளித்தது.

பாதுகாப்பு அமைச்சர் நாட்டின் மீயுயர் சபையில் தம்மால் மீள சிலை அகற்றப்படவில்லை எனவும் பாதுகாப்பிற்காகவே சிலை நகர்த்தப்பட்டதாகவும் மீள நிறுவப்படும் என அறிவித்தார்.

இவைகள் அரசாங்கத்தின் நடத்தைகள் கிடையாதா? கொள்கை கிடையாதா? தமிழ் மக்களை ஒடுக்கிவிட்டு சகித்துவாழக்கோருவதில் என்ன நியாயம் எனக்கேள்வி எழுப்பியதுடன் தேசிய மக்கள் சக்தி எதிர்த்தால் வாக்கெடுப்பின் ஊடாக தீர்மானம் பரிசீலிக்கப்படும் என்றார்.
 
இந்த விடயத்தில் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி முன்வைக்கப்படும் பிரேரணையை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி தேசிய மக்கள் சக்தியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சபையில் இருந்து அரசாங்கத்தை நியாயப்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக தமது பலத்த எதிர்ப்பினை வெளிப்படுத்தியவாறு வெளிநடப்புச் செய்தனர்.

சபை ஆசனங்களில் இருந்து எழுந்து சென்று தமது எதிர்ப்பினை காட்டினர்.  
இந் நிலையில் இந்தப் பிரேரணையில் எவருக்காவது ஆட்சேபனைகள் உள்ளனவா எனத் தவிசாளர் கேள்வி எழுப்பினார்.

பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்கள், நடைபெற்றது தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஆக்கிரமிப்பு என பிரேரணையின் மீது கருத்துரைத்தனர்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரேரணையினை வலுப்படுத்தம் கவனயீர்ப்பு கருத்துக்களுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது.

Related posts

வேறு வழி இல்லாமல் நாடு திரும்பினார் கோட்டாபய

போலியான குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள்

editor

யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

editor