குமட்டல், வாந்தி, தலைச்சுற்று என்பனவற்றைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் நச்சுத்தன்மை ஏற்பட்டதால், ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஐ.டி.எச்.வைத்தியசாலையில் கடுமையாக சுகவீனமுற்று இறுதியில் உயிரிழந்தனர்.
எங்களுக்குத் தெரிந்தவரை, கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட முதற்கட்ட நுண்ணுயிரியல் பரிசோதனையில் இந்த தடுப்பூசிகளில் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவலுடன், மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, வைத்தியசாலை கட்டமைப்பிலிருந்து 270,000 இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை திரும்பப் பெற்றுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இந்த தடுப்பூசி கொள்வனவு அவரச கொள்வனவா ? இங்கு இதன் தரம் பரிசோதிக்கப்பட்டதா? அவ்வாறு மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவுகள் எத்தகையன என்பது தொடர்பில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளன.
நமது நாட்டில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் தரத்தை பரிசோதிக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இரண்டு உயிர்கள் பலியாகிய சம்பவங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் முன்வைத்த கருத்துக்களுக்கு அரசாங்கத்தின் பதிலை அறிய விரும்புகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தரமற்ற மருந்துகள் தொடர்பில் இன்று (22) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளைக் கொண்ட ஆய்வக வசதிகள் நமது நாட்டில் காணப்படுகின்றனவா என்பதையும், உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வக வசதிகளை நிறுவுவதற்கு அரசாங்கம் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் ஊடாக எடுத்த நடவடிக்கைகளை முன்வைக்குமாறும், இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சேனக பிபிலே மருந்துக் கொள்கையை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றன.
தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மற்றும் ஊழலை நாட்டிற்கு வெளிக்கொணர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கூட நாம் முன்வைத்துள்ளோம்.
இதற்காக வைத்தியர் சமல் சஞ்சீவவும் காவிந்த ஜயவர்தனவும் பாரிய போராட்டத்தை நடத்தி வந்தனர்.
அவ்வாறு போதிலும் அண்மையில், தவறான செய்திகளைப் பரப்பி, மருந்துகள் தொடர்பில் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்து அல்ல என சுட்டிக்காட்டப்பட்டன.
இந்நாட்டில் தரமற்ற மருத்துவ மோசடி நடைபெற்று வரும் வேளையில், சேனக பிபிலேவின் கொள்கையை பெயரளவில் மட்டுமே ஏற்றுக்கொண்டவர்கள் போலிச் செய்திகளை உருவாக்கி வருகின்றனர்.
இந்த தடுப்பூசிகளால் ஏற்பட்ட இரண்டு மரணங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, நாட்டில் தரமற்ற தடுப்பூசி மாபியாவின் தொடர்ச்சியான செயல்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சுகாதார அமைச்சர் என்ற முறையில் தனது பொறுப்புகளை அவர் புறக்கணித்தவராக கருதப்படுவார்.
220 இலட்சம் மக்களின் சுகாதாரத்தை மனித உரிமையாகும் அடிப்படை உரிமையாகவும் கருதும் ஐக்கிய மக்கள் சக்தி இந்த தரமற்ற தடுப்பூசி விவகாரத்துக்காக இன்றும் குரல் கொடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
