இலங்கை தபால் திணைக்களத்தின் பொலன்னறுவை தலைமை தபால் அலுவலகம் இன்று (17) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு சுகாதார சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.
பொலன்னறுவை தலைமை தபால் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முத்திரை உப கவுண்டர் ஒன்றும் திறக்கப்பட்டது.
மேலும், இந் நிகழ்வின் போது, உப அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட தனிப்பயனாக்க முத்திரையும் வழங்கி வைக்கப்பட்டு முதலாவது பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 228 வருட வரலாற்றைக் கொண்ட இந் நாட்டில் தபால் சேவை திட்டமிட்ட முறையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இலங்கையின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய ஊடகமாகவும், பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் இடமாகவும் இலங்கை தபால் சேவை நிறுவப்பட வேண்டும்.
தற்போது திறைசேரியை நம்பியுள்ள தபால் திணைக்களம் நவீன தொழில்நுட்ப சேவைகள் கொண்ட புதிய முகத்துடன் இலாபம் ஈட்டும் நிறுவனமாகவும் மக்கள் வர விரும்பும் இடமாகவும் மாற்றப்பட வேண்டும்.
தபால் சேவையின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் ரூ. 1300 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பல ஆண்டுகளாகக் கோரப்பட்டு வந்த புதிய கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும், தபால் துறையின் எதிர்கால இலக்குகளை வெற்றிகொள்ளும் வகையில் மக்களுக்கு அத்தியாவசியமான பல புதிய சேவைகளை இந்த தபால் நிலையத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி. சரத், பொலன்னறுவை மாநகர சபைத் தலைவர் லலித் திஸ்ஸ கோரலகே, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏகநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான என்.ஆர்.பி. பண்டார, பி.எம்.எஸ். ரத்னசிறி, தபால் மா அதிபர் ருவன் சத்குமார, பிரதி தபால் மா அதிபர் (வடமத்திய) சஞ்சீவ பெர்னாண்டோ மற்றும் புதிய தபால் நிலைய ஊழியர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.