தங்காலை சீனிமோதர பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த போது கையகப்படுத்தப்பட்ட LP 3307 என்ற பதிவு எண்ணைக் கொண்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கல்கிஸ்ஸை நீதவான் பசன் அமரசேன கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர், வலவ்வத்த ஸ்ரீ தர்மராம வீதி இரத்மலானை என்ற முகவரியில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
இலக்கம் 43 கொட்டம்பகவதுகொட, சீனிமோதர, தங்காலை முகவரி கொண்ட வீட்டில் இரண்டு சடலங்கள் நேற்று மீட்கப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் தொகையை பொலிஸார் கைப்பறியிருந்தனர்.
அதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், லொறியின் உரிமையாளரான குறித்த சந்தேகநபரை 11 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்து கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், இன்று (23) சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
