மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை (CTB) பேருந்து ஒன்று இன்று (24) அதிகாலை தங்காலை, வெலியார பகுதியில் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.
டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 2:45 மணியளவில் கொழும்பு–வெல்லவாய பிரதான வீதியில் உள்ள வெலியார பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மட்டக்களப்பு, பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, முன்னால் பயணித்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோதியதில் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்தின் விளைவாக, பேருந்தில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லாரியின் சாரதியும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் தங்காலை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தங்காலை பொலிஸார் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.