அரசியல்உள்நாடு

டிரம்பின் வரிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இன்னும் தீர்வில்லை – சஜித் பிரேமதாச

நமது நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பகுதி அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர தீர்வை வரிகள் நமது நாட்டின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க போட்டியை உருவாக்கியுள்ளன.

இந்த வரிகளை எதிர்கொள்ள அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்து முடிவெடுப்பவர்களுடன் ஏனைய நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடி தமக்கு சாதகமான முறைகளில் இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றனர்.

ஆனால் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்பானவர்கள், தொழில்துறை துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், இத்தகைய இணக்கப்பாடுகளை இதுவரையில் எட்டவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியபோது, ​​அரசாங்கம் பிரதிநிதிகளை அனுப்பி கலந்துரையாடல்களை நடத்தும் என இந்த அரசாங்கம் வீராப்பு பேசியது. ஆனால் இன்றுவரை இந்தப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் இல்லை.

நமது நாட்டின் ஏற்றுமதித் துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் தருணத்தில், இந்த செயற்திறனற்ற அரசாங்கம் அமைதி காத்து வருகிறது. இந்த அரசாங்கத்தால் பதில்களையும் தீர்வுகளையும் வழங்க முடியாதுபோயுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு நாடாக, 2028 ஆம் ஆண்டுக்குள் நமது வெளிநாட்டுக் கடனை நாம் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் முந்தைய அரசாங்கத்தால் எட்டப்பட்ட IMF இணக்கப்பாட்டை எந்த திருத்தங்களையும் மேற்கொள்ளாது அதே முறையில் முன்னெடுத்து செல்கிறது.

ஏற்றுமதியில் பிரச்சினைகள் காணப்படுகின்ற படியால், ​​வெளிநாட்டுக் கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்ற விடயத்தில் சிக்கல்கள் நிலவுகின்றன.

கடனை திருப்பிச் செலுத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 5% ஆக அமைந்து காணப்பட வேண்டும். இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.5% ஆகவும், அடுத்த ஆண்டு 3.1% ஆகவும் இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த 5% விகிதத்தை எட்ட வேண்டும். என்றாலும், இந்த அரசாங்கம் ஏற்றுமதி துறைக்கு உரிய பெறுமானத்தை வழங்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கலாவெவ நன்னீர் மீன்பிடிக் கிராமத்தில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு இக்கிராம மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலைகள் மூலம் நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தந்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக இன்று நமது நாட்டின் ஏற்றுமதிகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன.

இன்னும் இந்த அரசாங்கத்தால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் ஓர் உடன்பாட்டை எட்ட முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் வந்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர் மக்களை மறந்து விடுகின்றனர்.

நான் இதனை மாற்றியமைத்துள்ளேன். மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்காமை, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்காமை, மக்களின் கேள்விகளுக்குப் பதில்கள் இல்லாமை போன்ற காரணங்களால் நாட்டில் ஒரு இடைவெளி தோன்றியுள்ளது.

இப்பிரதேச மக்களும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய அரசாங்கம் கூட இப்பிரச்சினைகள் குறித்து புரிந்து கொள்ளாப் போக்கில் இருந்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று, மக்கள் ஜீவிப்பது கடினமான ஒரு விடயமாக மாறியுள்ளது. மூன்று வேளை உணவுகளைக் கூட உரியவாறு பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளனர்.

நாளாந்த வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்து கொள்ளும் விடயத்தில் கடன் சுமையை பெரும்பாலானோர் எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பிட்ட வருமான மூலத்தை பலர் இழந்துள்ளனர். இதனால் பெரும்பாலானோர் கடனாளிகளாக மாறிவிட்டனர். தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுற்றுலா, விவசாயம் அல்லது மீன்பிடி என எத்துறைகளாக இருந்தாலும், இந்தத் தொழில்கள் மூலம் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை இன்றைய பொருளாதார சூழ்நிலையில் உருவாக்கித் தராது.

மக்களிடம் காணி உறுதிப் பத்திரங்களோ அல்லது காணிக்கான ஏனைய ஆவணங்களோ இல்லாதவர்களும் இருக்கின்றனர். வீட்டிக்கும், காணிக்கும் மூலதன மதிப்பு இல்லாமையினால் வளர்ச்சியும் தடைபடுகிறது.

இம்மக்களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. வனவிலங்கு துறையுடன் தொடர்புடைய சுற்றுலாத் துறையை எம்மால் கட்டியெழுப்ப முடியும். ஆனால் அதற்கான ஏற்பாடுகளையும் இந்த அரசாங்கம் எடுப்பதாக இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்து, பாராளுமன்றத்தில் முன்வைத்து, தீர்வுகள் தேடப்படும்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி என்ற வகையில் பெற்றுத் தரக் கூடிய தீர்வுகளைப் பெற்றுத் தர நாம் நடவடிவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

சிலிண்டரின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க

editor

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி மூவர் காயம்

பொதுமக்கள் பார்வைக்கூடம் தற்காலிகமாக பூட்டு