டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக, 22 நாடுகள் மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளன.
இந்த வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களிடையே முறையாக , ஒருங்கிணைக்கப்பட்டு, திறம்பட பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஜனாதிபதி அவர்களால் வெளிநாட்டு நிவாரண உதவி (பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) நிறுவப்பட்டது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் செயல்படும் இந்தக் குழு பல தடவைகள் சந்தித்து, நிவாரண நடவடிக்கைகள் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகபட்ச செயல்திறனை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக நாட்டிற்கு வரும் அனைத்து வெளிநாட்டு உதவிகளும் ஒருகொடவத்தை களஞ்சிய வளாகத்தில் பாதுகாப்பாகவும் முறையாகவும் களஞ்சியபப்டுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிவாரணப் பொருட்களை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் திறம்பட வழங்கும் நடைமுறை, தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம் (NDRSC) மூலம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் ஆறாவது அமர்வு நேற்று (டிசம்பர் 30) அனர்த்த முகாமைத்துவ நிலைய (DMC) வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பெறப்பட்ட வெளிநாட்டு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிவாரணக் குழுக்கள் வழங்கிய சேவைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பெறப்பட்ட நிவாரண உதவிகளில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்ப உபகரணங்கள் போன்றவை அடங்கும்.
இதற்கு மேலாக, பாலங்கள் மீளமைப்புக்கான வளங்கள் உட்பட சிறப்பு கட்டிட பொறியியல் உபகரணங்கள், போக்குவரத்து மற்றும் விநியோக தேவைகளுக்கான வாகனங்களும் சர்வதேச சமூகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளை இழந்த மக்களுக்கு பாதுகாப்பான தற்காலிக தங்குமிடங்களை வழங்குவதற்காக சிறப்பு கூடாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடங்க உதவும் வகையில் வீட்டுப்பவனை பொருட்கள், உடைகள், மற்றும் பிற அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்களும் கிடைத்துள்ளன.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் மற்றும் விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு தொடர்பான தகவல்கள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஜனாதிபதி செயலகத்துக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் அறிக்கையிடப்பட்டு வருகின்றதுடன் அவற்றால் வெளியிடும் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் ஊடகங்களுக்கும் வழங்கப்படுகின்றன.

ஒருகொடவத்தை களஞ்சிய வளாகத்திலிருந்து மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்படும் நடைமுறை, பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் மாவட்ட செயலகங்கள் மூலம் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
அக்களஞ்சிய வளாகத்தின் சேமிப்பு திறன் விரிவாக்கப்பட்டு, பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பணியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு தொடர்பான முழுமையான செயல்முறை குறித்து எதிர்காலத்தில் முறையான கணக்காய்வும் மேற்கொள்ளப்படும் எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
அத்துடன், அனர்த்தத்தின் ஆரம்பத்திலிருந்து பல நாடுகள் மனித வள ஆதரவை இலங்கைக்கு வழங்க முன்வந்தன. அதன்படி, தற்போது ஏழு (07) நாடுகளைச் சேர்ந்த 89 நிபுணர்களைக் கொண்ட நிவாரணக் குழுக்கள் நாட்டின் நிவாரண நடவடிக்கைகளில் பங்களித்து வருகின்றன.
இக்குழுக்கள் உள்நாட்டு நிவாரண சேவை அமைப்புகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான மருத்துவ உதவிகள் வழங்கள், மற்றும் அவசர கட்டுமான பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.
மேலும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அனர்த்த நிலைமைகளை கண்காணித்தல், பாதிக்கப்பட்ட பகுதிகளை வரைபடமாக்கல், மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு சேவைகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகளையும் இக்குழுக்கள் வழங்கியுள்ளன. தங்களது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த சில நிவாரணக் குழுக்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளன.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஜனாதிபதி அவர்களினதும் இலங்கை மக்களினதும் சார்பாக, இலங்கை மக்களுக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் மற்றும் அந்நாடுகளின் மக்களுக்கும் தனது உளமார்ந்த நன்றியையும் ஆழ்ந்த பாராட்டையும் தெரிவித்தார்.
மேலும், தங்களது தாய்நாட்டிற்காக தன்னலமின்றி ஆதரவு வழங்கி பெரும் தியாகங்களை செய்த வெளிநாட்டில் வாழும் இலங்கை சமூகத்தினருக்கும் அவர் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
