அரசியல்உள்நாடு

டிஜிட்டல் மாற்றம் ஏற்படுவது அரசாங்கத்தின் அடிப்படைத் திட்டமாகும் – ஜனாதிபதி அநுர

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின் அங்கமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

யாரும் தனித்தனியாகச் செயல்பட முடியாது என்று கூறிய ஜனாதிபதி, மக்களுக்காக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அனைவரின் ஆதரவையும் கோரினார்.

ஹம்பந்தோட்டை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (11) காலை நடைபெற்ற ஹம்பந்தோட்டை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு விவசாயம், மீன்பிடி, சுகாதாரம், கல்வி, கிராமிய வீதி, காணி, நீர்ப்பாசனம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் வெற்றி குறித்தும் ஆராயப்பட்டது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவன மட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள், இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அந்த நிதியைப் பயன்படுத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தென் மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 574 மில்லியன் நிதி ஒதுக்கியிருந்தாலும், அதில் இதுவரை 23 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது எனவும் இது 4% முன்னேற்றம் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் தேவைகளுக்காக தொடர்புடைய ஒதுக்கீடுகளை முறையாகச் செலவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான சிக்கல்களை தீர்த்தல் உள்ளிட்ட காணி பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

பல்வேறு அதிகாரத்தரப்பினருக்கும் சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கும் காணி வழங்குவதற்குப் பதிலாக, மிகவும் பொருத்தமான மக்களுக்கும் பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் நடவடிக்கைகளுக்கும் காணிகளை வழங்கும் கலாச்சாரம் நாட்டிற்குத் தேவை என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பாடசாலை கட்டமைப்பு குறித்து முறையான மீளாய்வு ஒன்றை மேற்கொண்டு திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அனைத்து பிள்ளைகளும் சிறந்த கல்வியைப் பெறும், மனித வளங்களை நன்கு நிர்வகிக்கும் மற்றும் வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தும் ஒரு திட்டமாக இது இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

உணர்ச்சிகள் அல்லது உள்ளுணர்வுகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கான முறையான தரவுக் கட்டமைப்பு தேவை என்றும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதன் அடிப்படையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரச்சினைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை வலுப்படுத்த அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும், 05 ஆண்டுகளுக்குப் பிறகு அரச சேவைக்குப் புதிதாக 30,000 பேரைச் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதேச செயலாளர்கள் உட்பட ஒவ்வொரு துறையிலும் பணியாற்றுபவர்களின் வசதிக்காக தேவையான வாகனங்களை வழங்குவதற்கான நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்த ஜனாதிபதி, காட்டு யானைப் பிரச்சினைக்குத் தீர்வாக முன்மொழியப்பட்ட யானை வழித்தடத்தை நிர்மாணிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட காணிகளை, அவை தனியார் துறைக்குரியவையா அல்லது அரசுக்குச் சொந்தமானவையா என்பதைப் பொருட்படுத்தாமல், கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மாவட்டத்தின் விவசாயப் பிரச்சினைகள், மீன்பிடித் துறைமுகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சிறுநீரகப் பிரிவின் பணிகளை முடிப்பதற்கு 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கக் கோரி சுகாதார அதிகாரிகள் சமர்ப்பித்த கடிதம் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

திறைசேரியுடன் கலந்துரையாடி அந்த நிதியை ஒதுக்குவதற்குத் தான் தனிப்பட்ட முறையில் தலையிடுவதாகவும் கூறினார்.

கடந்த காலங்களில் ஒரு நாட்டின் வளர்ச்சியானது பெரிய கட்டிடங்களைக் கட்டுவதன் மூலம் அளவிடப்பட்டாலும், இன்று தொழில்நுட்பம் ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவுகோலாக மாறியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டில் டிஜிட்டல் மாற்றம் ஏற்படுவது அரசாங்கத்தின் அடிப்படைத் திட்டமாகும் என்றார்.

அதற்காக, குடிமக்களிடையே கலாச்சார மாற்றத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை விளக்கிய ஜனாதிபதி, எதிர்வரும் செப்டம்பர் மாதத்தை நாட்டில் டிஜிட்டல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான மாதமாக பிரகடனப்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

டிஜிட்டல் உலகில் நமது நாட்டை ஒரு புதிய தனித்துவத்துடன் அடையாளங் காண வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை அதில் ஒரு புதிய பாய்ச்சலைக் குறிக்கிறது எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் பிரபா செனரத், ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்த செனரத் விதாரண, அதுல வெலந்தகொட, சாலிய சந்தருவன் மதுரசிங்க மற்றும் தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அலஹகோன், உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பிமல் இந்திரஜித் டி சில்வா மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

கணக்காய்வு அறிக்கையை உடன் பகிரங்கப்படுத்துங்கள் – தொழிற்சங்க உறுப்பினர்கள் கோரிக்கை.

இன்று முதல் நாடாளுமன்றத்தை பார்க்க மக்களுக்கு வாய்ப்பு

மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி