உள்நாடு

டிசம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணையவிருந்த பெண்ணே இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தார்

தெற்கு அதிவேக வீதியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரை ஏற்றிச் சென்ற வேன் லொறியுடன் இன்று (16) அதிகாலை மோதி கோர விபத்தொன்று பதிவான நிலையில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பிள்ளைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் ஓபாத்த, வீரதொட மல்துவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கேக் விற்பனையில் ஈடுபட்ட புஷ்பகுமாரி சந்தமாலி என்பவரே உயிரிழந்தார்.

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பவிருந்த சந்தமாலியின் சகோதரரை அழைத்து செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தவலமவில் இருந்து வேன் ஒன்றில் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

கலனிகம மற்றும் கடதுடுவ பகுதிகளுக்கு இடைப்பட்ட 9.6 கி.மீ தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளுக்கு பொருட்களை விநியோகித்த பிறகு கொழும்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த லொறியொன்றின் பின்புறத்தில் வேன் மோதுண்டது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தமாலியை திருமணம் செய்யவுள்ள நபரே அந்த வேனை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தமாலிக்கும், குறித்த இளைஞருக்கும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், அவர்கள் இருவரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணையவிருந்ததாக கூறப்படுகின்றது.

சந்தமாலி வேனின் முன்பக்க இடது இருக்கையில் அமர்ந்திருந்தார், விபத்துக்குப் பிறகு, பொலிஸார், தீயணைப்பு மற்றும் போக்குவரத்து பொலிஸார் வேனில் சிக்கியவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதேநேரம், அதே வீதியில் பயணித்த வாகனங்களில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை வேனில் இருந்து வெளியே எடுத்து மூன்று குழந்தைகளையும் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

காயமடைந்தவர்கள் கஹதுடுவ மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்,

மேலும் மூன்று இளம் பிள்ளைகள் மாத்திரம் மேலதிக சிகிச்சைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தற்போது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இஸ்ரேலில் இருந்து வரவிருந்த இளைஞரின் மனைவியே அவர் என்பதுடன் காயமடைந்த பிள்ளைகள் அவர்களது குழந்தைகள் எனவும் தெரியவந்துள்ளது.

சாரதியின் அதிக வேகம் மற்றும் தூக்கமின்மை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் வேன் கடுமையாக சேதமடைந்த நிலையில், லொறியின் பின்புறம் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இலங்கை நிதியுதவி கோரவில்லை – IMF

பொலிஸார் மீது மோதிய டிப்பர் கண்டுபிடிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் சிக்கினர்