பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்துவதற்கு ஜே.வி.பி.யின் மாணவர் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக வெள்ளிக்கிழமை (02) அன்று நாவலப்பிட்டி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிவேக நெடுஞ்சாலைகள் அமைத்ததுக்காக எங்களை விமர்சித்த ஜே.வி.பியினர் மே தின பேரணிக்கு மக்களை அந்த அதிவேக நெடுஞ்சாலை வழியாக கொழும்புக்கு அழைத்து சென்றதோடு, அந்த ஆதரவாளர்கள் தங்கள் வாகனங்களை அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி உணவு உட்கொண்டுள்ளனர் இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்துவதற்கு ஜே.வி.பி.யின் மாணவர் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை நிறுத்திய பிறகு, நாட்டில் கல்வியை மேம்படுத்த முடியும் என்றும், கட்சிக்குள் உள்ள பிரச்சினையைத் தீர்த்த பிறகு, நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றார்.
இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில், கூட்டத்தை ஏற்பாடு செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டாளர்கள், அண்மையில் அடையாளம் தெரியாத நபர்களின் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல் ஆர்வலர் டான் பிரசாத்தின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்களான சீ.பீ.ரத்நாயக்க, லொஹாண் ரத்வத்தே ஆகியோரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.