அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜப்பான், இலங்கை வர்த்தக மன்றத்தில் உரை நிகழ்த்தினார் ஜனாதிபதி அநுர

ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதற்கும், கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஜப்பான் – இலங்கை வர்த்தக மன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜப்பான் வர்த்தக சமூகத்தின் சுமார் 200 சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டதோடு, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO), பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சு (METI), ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழு மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) ஆகியவை இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

இங்கு உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, தேசிய டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாட்டிற்கான இலங்கை அரசாங்கத்தின் மூலோபாய முயற்சிகளை சுட்டிக்காட்டினார்.

தரவு மத்திய நிலைய அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதில் விசேட கவனம் செலுத்தி, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கை முதலீட்டுச் சபையினால் (BOI), ஜப்பானிய முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள முக்கிய துறைகளான, உற்பத்தி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்டவைகள் குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அதன் மூலம் வலுவான கொள்கை ஆதரவு மற்றும்

முறையான செயல்முறைகள் ஊடாக முதலீட்டுத் தேவைகளுக்கான வசதிகளை வழங்குவதற்கு இலங்கையின் தயார்நிலையை எடுத்துக்காட்டியது.

இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் ஜப்பானிய வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஒரு கேந்திர வலையமைப்பு அமர்வும் இடம்பெற்றது.

இதற்கு இணையாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் JETRO தலைவர் இஷிகுரோ நொரிஹிகோ (ISHIGURO Norihiko) ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலும் நடைபெற்றது.

இலங்கையுடன் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை அபிவிருத்தி செய்வதற்கு இரு நாடுகளின் வர்த்தக சமூகங்களுக்கிடையில் பாலமாக செயற்படுவதற்கான தனது அர்ப்பணிப்பை JETRO இன் தலைவர் இங்கு மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஒகுஷி மசாகி (Ogushi Masaki), ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் கொபயாஷி ஃபுமிஹிகோ(KOBAYASHI Fumihiko) மற்றும் இலங்கை வர்த்தக சபை மற்றும் ஜப்பான்-இலங்கை வர்த்தக மன்றத்தின் உயர்மட்ட வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

கொரோனா அச்சுறுத்தல்; பரீட்சைகள் அனைத்து ஒத்திவைப்பு [VIDEO]

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திகதி குறித்து சரியான தீர்மானமில்லை

இந்திய பிரதமர் கோட்டாபயவுக்கு தொலைபேசி அழைப்பு