ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஜப்பான் பிரதமர் இஷிபா ஷிகெருவுக்கும் இடையில் இன்று டோக்கியோவில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த இரு தரப்பினரும், இரு நாடுகளுக்கும் இடையில் நிறுவப்பட்ட ஆழமானதும், விரிவாக்கப்பட்டதுமான கூட்டாண்மையின் கட்டமைப்பின் கீழ், பாதுகாப்பு, பொருளாதாரம், முதலீடு மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் தங்கள் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்துதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு மூலம் இலங்கையின் பொருளாதார மீட்சிப் பாதையை பிரதமர் இஷிபா பாராட்டியதுடன், இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் (OCC) இணைத் தலைமைகளில் ஒன்றாக விளங்குவதோடு, இவ்வாண்டு மார்ச் மாதம் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பு நாடொன்று, இலங்கையுடன் செய்துகொண்ட கடன் மறுசீரமைப்பு குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முதல் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினராக ஜப்பான் விளங்குகின்றமை உட்பட, இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் முன்கூட்டியே கைச்சாத்திட உதவியமைக்கும், ஜப்பானின் தலைமைக்கு ஜனாதிபதி திஸாநாயக்க பாராட்டுத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ள திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்தங்களை தொடர்ந்து செயற்படுத்துவதும், கடன் மறுசீரமைப்பு செயன்முறையை முன்கூட்டியே முடிப்பதும் இலங்கைப் பொருளாதாரத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் மீட்டெடுக்க எதுவாக அமையும் என்பதை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர்.
கடன்சார் நிலைபேறானதன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டுக் கடன்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
2024 ஆம் ஆண்டில், முன்னர் கைச்சாத்திடப்பட்ட 11 யென் கடன் திட்டங்களை மீண்டும் தொடங்குவது உட்பட, கடன் வழங்கிய ஏனைய நாடுகளைக்காட்டிலும் ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கு ஜனாதிபதி திஸாநாயக்க நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் இணைப்பை வலுப்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பங்களிக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் (கட்டம் 2) ஏலம் மீண்டும் தொடங்கப்பட்டதை இரு தரப்பினரும் வரவேற்றதுடன், இது தொடர்பிலான செயன்முறையை விரைவாக முடிப்பதற்கான ஈடுபாட்டை உறுதிப்படுத்தினர்.
பரிமாற்றக் கோடுகளின் மேம்பாடு மற்றும் அபிவிருத்தி மற்றும் புவிக்காந்தவியல் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள யென் கடன் திட்டங்களை சீராக செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
சிறிய அளவிலான பால் பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் சகலரையும் உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், பாலுற்பத்தித் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கான ஜப்பானின் மானிய உதவி தொடர்பான குறிப்புகளில் கைச்சாத்திடுவதையும் பரிமாறிக்கொள்வதையும் இரு தரப்பினரும் வரவேற்றனர்.
இலங்கையின் நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கு, கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் நகர்ப்புற போக்குவரத்தை சீரமைக்க உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துசார்ந்த தீர்வுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
“ஏற்றுமதி சார்ந்த தொழிற்துறை வழித்தடத்தை உருவாக்குதல்” என்ற எண்ணக்கருவிலான பயணப்பாதை வரைபடத்தின் அடிப்படையில் ஜப்பானிய முதலீட்டுடன், ஏற்றுமதியை வலுப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்குமான வழிகள் குறித்து மேலும் விவாதிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பாக, இலங்கை தொழில் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கூட்டாக ஆராயும் அரசுகளுக்கிடையேயான பொருளாதாரக் கொள்கைசார் உரையாடலை மீண்டும் தொடங்க இரு தரப்பினரும் இணங்கினர்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் உள்ள குறிப்பிடத்தக்க வாய்ப்பு குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தியதுடன், வெளிப்படைத்தன்மை, முன்கணிப்பு மற்றும் பாகுபாடற்ற தொழிற்பாடு உள்ளிட்ட விடயங்களுடன், இலங்கையில் வணிகச் சூழலை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினர்.
இது சம்பந்தமாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ஜப்பான்-இலங்கை வணிகச் சூழல் குழுவை இரு தரப்பினரும் வரவேற்றனர்; இவ்வொன்றுகூடல் காலாண்டு அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.
தேர்தலுக்குப் பின்னரான, தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியினால், இலங்கையில் ஏற்பட்டுள்ள முதலீடு மற்றும் வணிகச் சூழலில் ஏற்பட்டுள்ள தரமான மாற்றத்தை ஜனாதிபதி திஸாநாயக்க பகிர்ந்து கொண்டார்.
இலங்கையில் உள்ள பல உயர் திறன் கொண்ட துறைகளில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஆராய்ந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானிய நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியப் பெருங்கடல் சார்ந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான காவற்துறைசார்ந்த மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் தடுப்பு திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
இந்தக் கண்ணோட்டத்தில், இவ்விஜயத்தின்போது முடிவுசெய்யப்பட்ட இலங்கை தொடர்பிலான முதல் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவித் (OSA) திட்டத்தின் மூலம் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் நிவாரணத் திறன்களை மேம்படுத்துவதற்காக மேம்பட்ட ஜப்பானிய ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) வழங்கப்படுவதை இரு தரப்பினரும் வரவேற்றனர்.
ஜப்பானின் கடல்சார் சுய பாதுகாப்புப் படை (JMSDF) கப்பல்கள் மற்றும் ஜப்பானின் கடல்சார் சுய பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கடற்படைக்கு இடையிலான கூட்டுப் பயிற்சிகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் திடமான முன்னேற்றத்தையும் இரு தரப்பினரும் வரவேற்றனர்.
இந்த ஆண்டு மே மாதம் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நகாடானி ஜென் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரண்டாவது ஜப்பான்-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையை கூட்டுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
இத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான ஈடுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பதை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
ஊழலை ஒழிப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் விருப்பத்தை பிரதமர் இஷிபா தெரிவித்தார். குறிப்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர்.
தேசிய நல்லிணக்கமும் சமூக-பொருளாதார மேம்பாடும், நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை மனதில் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் உறுதிப்பாட்டை பிரதமர் இஷிபா மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கையில் கண்ணிவெடி அகற்றுவதற்கான, இலங்கையின் கண்ணிவெடி நடவடிக்கை திட்டம் சார்ந்த நடவடிக்கைகளில் ஒரு முக்கிய நன்கொடையாளராக ஜப்பான் தொடர்ந்து உதவி செய்வதற்கு ஜனாதிபதி திஸாநாயக்க பாராட்டு தெரிவித்தார்.
கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கான ஜப்பானின் உதவி, “கண்ணிவெடி-தாக்கம் இல்லாத இலங்கை” என்ற ஒட்டுமொத்த இலக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தேசிய நல்லிணக்கம், சமூக அதிகாரமளித்தல் மற்றும் மோதலுக்குப் பிந்தைய வளர்ச்சியை ஆதரிப்பதாகவும் அங்கீகரிக்கப்பட்டது.
திறமையான மனித வளங்கள் உட்பட மக்களிடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்; மேலும் மொழிக் கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஒப்புக்கொண்டனர்.
பரஸ்பர கலாச்சார புரிதலை ஆழப்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் ஜப்பானிய மொழிக் கல்வியை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் இணங்கியதுடன், இது தொடர்பான முயற்சிகளை முன்னேற்றுவதற்கான இரு அரசாங்கங்களின் நோக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ஜப்பானின் சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசிபிக் தொலைநோக்குப் பார்வை மூலம் பிராந்தியத்தில் ஜப்பானின் அதிக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய இரு தரப்பினரும், விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள பிரச்சினைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு தரப்பினரும் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்திற்கான ஆதரவையும் மீண்டும் வலியுறுத்தினர்.
கடல்சார் நாடுகள் என்ற வகையில், இரு தரப்பினரும் அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் கடல்மார்க்க மற்றும் வான்வழிச்சுதந்திரத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
மேலும் 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டில் (UNCLOS) பிரதிபலித்தது போல, நிலையான மற்றும் அமைதியான சர்வதேச கடல் ஒழுங்கைப் பேணுவதற்கு சர்வதேச சட்டத்தை மதித்து பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் நேர்மறையான ஈடுபாட்டின் மூலம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மன்றத்தின் முட்கூட்டிய சீர்திருத்தத்தை நோக்கி இரு தரப்பினரும் தங்கள் தொடர்ச்சியான ஒத்துழைப்பை மீண்டும் வலியுறுத்தினர். பாதுகாப்பு மன்றில் நிரந்தர இடம் பெறுவதற்கான ஜப்பானின் முயற்சிக்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவிற்கு பிரதமர் இஷிபா நன்றி தெரிவித்தார்.
உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை கட்டமைப்பின் மூலக்கல்லாக அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (NPT) பராமரித்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
மேலும் இத்துறையில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற கூட்டாக இணங்கினர். இந்தச் சூழலில், பிரதமர் இஷிபா, 2023 ஆம் ஆண்டில் இலங்கை விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அங்கீகரித்ததுடன், சர்வதேச அணு இயக்கச்சக்தி முகவரகத்தின் (IAEA) மேலதிக நெறிமுறையின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஜப்பானின் ஒசாகா, கன்சாயில் நடைபெறும் எக்ஸ்போ 2025 இல் இலங்கை தீவிர ஈடுபாட்டுடன் பங்கேற்றதையும், இலங்கையின் தேசிய தினத் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி திஸாநாயக்கவின் வருகை தந்தமையினையும் பிரதமர் இஷிபா வரவேற்றார்.
இவ்விஜயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒசாகா மற்றும் டோக்கியோவில் இரண்டு உயர்மட்ட வணிக நிகழ்வுகள் நடைபெறுவது உட்பட பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
தனது ஜப்பானிய விஜயத்தின் போது, வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் உபசரணைக்காக பிரதமர் இஷிபா மற்றும் ஜப்பானிய மக்களுக்கு ஜனாதிபதி திஸாநாயக்க மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.