அரசியல்உள்நாடு

ஜப்பானிய நிதியுதவி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டாவை இன்று (27) சந்தித்தார்.

இச்சந்திப்பில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவு மற்றும் ஜப்பானின் முக்கிய நிதி உதவித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

2024 நிதி உதவித் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ஜப்பானிய யென் நிதி ஒதுக்கீட்டில் மீனவர் பாதுகாப்புக்கான திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மீனவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக காங்கேசன்துறைக்கு ஒரு பெட்ரோல் படகும், திருகோணமலைக்கு ஒரு Rigid hull inflatable படகும் வழங்கப்படுகின்றன.

2023 ஆம் ஆண்டில் 200 மில்லியன் ஜப்பானிய யென் நிதி ஒதுக்கீட்டில் உள்ளடங்கும் ஒரு திட்டமான கடல் உணவு பொருட்களுக்கான குளிர்பதனச் சங்கிலியை மேம்படுத்துவது குறித்தும் உரையாடப்பட்டது.

இந்த முயற்சியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளில் மூன்று பனிக்கட்டி தயாரிக்கும் இயந்திரங்களை நிறுவுவதும், மீன்வளப் பொருட்களின் தரம் மற்றும் சேமிப்பை மேம்படுத்த இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு (CFC) மூன்று குளிர்சாதன லாரிகளை வழங்குவதும் அடங்கும்.

கிழக்கு மாகாணத்தில் மீன்படி துறைமுகங்களின் மேம்பாட்டிற்கு ஜப்பானின் ஆதரவை அமைச்சர் சந்திரசேகர் கோரினார், இதில் நவீன களஞ்சிய வசதிகளை நிறுவுதல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த தொழில்நுட்ப உதவி வழங்குதல் ஆகியவை அடங்கும்.

தூதர் இசோமாட்டா அமைச்சருக்கு தனது ஆதரவை உறுதிசெய்தார், மேலும் இந்த முயற்சிகளை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மூலம் முறைப்படுத்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி பி.கே. கோலிதா கமல் ஜினதாசா மற்றும் இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் முதல் செயலாளர் ஓஹாஷி கென்ஜி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related posts

சீனாவிடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 283 ஆக உயர்வு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 6 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்