அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர்களால் பொதுமக்களுக்கு விருந்துபசாரங்கள் வழங்குவது சட்டப்படி குற்றம்

‘‘ஜனாதிபதி வேட்பாளர்களால் உணவு, பானங்கள் அல்லது சிற்றுண்டிகளை மக்களுக்கு வழங்குவதற்காக விருந்துகளை நடத்துவது ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும்’’ என மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) பி.பீ.சி.குலரத்ன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரால் அப்பகுதியைச் சேர்ந்த தொழில்வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுக்காக நடத்தப்படவிருந்த விருந்துபசாரமொன்றை தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதையடுத்து புதிய பொது விவாதம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களுக்கு உணவு விருந்துபசாரங்களை வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) பி.பீ.சி.குலரத்ன தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு விருந்துகளை நடத்தியுள்ளனர். இருப்பினும், அந்த நேரத்தில் இந்த விடயம் பெரிதாகக் கவனத்திற் கொள்ளப்படாத நிலையில், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் கவனம் செலுத்தப்படுகிறது.

அப்படி நடத்துவது ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் ஆதரவாளர்களுக்குத் தூண்டுதலாக அமையும் என்றும் அதனைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

வேட்பாளர்கள் உணவு, பானம், குளிர்பானங்கள் அல்லது பரிசுகளை வழங்குவது ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சட்டத்தின் 77ஆவது பிரிவின்படி குற்றமாகும் என்றார்.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் மத்தியில் பிரசாரங்கள் மரதன் போட்டிபோலுள்ளது. கூட்டங்கள், வேட்பாளர் விவாதங்கள், ஊடக நேர்காணல்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசார நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்.

Related posts

13,392 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி!

editor

தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பம்

ஓட்டமாவடியில் விபத்து – தாயும், மகனும் காயம்

editor