அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் சியம்பலாண்டுவ “ரிவிதனவி” சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

2030 ஆம் ஆண்டுக்குள் இந்நாட்டின் தேசிய மின்சாரத் தேவைகளில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக,
இந்நாட்டில் நிர்மாணிக்கப்படும் மிகப் பாரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டமான சியம்பலாண்டுவ “ரிவிதனவி” சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய மின் கட்டமைப்பில் 100 மெகாவொட் திறனை சேர்க்கும் இந்தப் பாரிய திட்டத்திற்கான முதலீடு 140 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவின் கொட்டியாகல கிராம அலுவலர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படும் இந்தத் திட்டம், நிலைபெறுதகு வலு அதிகாரசபை ஊடாக திட்டத் தளம், பிரவேச வீதி மற்றும் குறித்த அனைத்து அனுமதிகளுடன் திட்ட முதலீட்டாளருக்கு வழங்கிய முதல் திட்டமாகும்.

இந்நாட்டின் வருடாந்த மின்சார நுகர்வு 15,000-16,000 ஜிகாவொட் மணிநேரங்களாக உள்ளதுடன், இந்தத் திட்டம் ஆண்டுதோறும் 219 ஜிகாவொட் மணிநேரங்களை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கும்.

இதன் மூலம் மின்சார உற்பத்திக்கான டீசல் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் 21 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும். இதன்படி, ஒரு ஏக்கரில் இருந்து சுமார் 41 மில்லியன் ரூபா அந்நிய செலாவணி நாட்டுக்கு சேமிக்கப்படும்.

இந்நாட்டின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் நிலைபெறுதகு வலுசக்தித் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லாக இருக்கும் ரிவிதனவி திட்டம் காரணமாக, வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் கார்பனீரொக்சைட்டின் அளவு, ஆண்டுக்கு சுமார் 150,000 மெட்ரிக் டொன்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் 12 மெகாவொட் மணிநேர பேட்டரி சேமிப்பு வசதிகளையும் கொண்டிருப்பதால், தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த சூரிய சக்தி பூங்காவிற்கு மேலதிகமாக, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, உற்பத்தி கட்டமைப்புடன் இணைக்க 27 கிலோமீட்டர் நீளமுள்ள 132 kV புதிய மின் பரிமாற்ற கட்டமைப்பும் நிர்மாணிக்கப்படுவதோடு, முதலீட்டாளர் ஒருவர் பரிமாற்ற கட்டமைப்பை உருவாக்கும் இந்நாட்டின் முதல் வலுசக்தி திட்டமும் இதுவாகும்.

அதேபோன்று, மொனராகலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய 132 kv கிரிட் துணை மின் நிலையமும் இதில் அடங்கும்.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப நிர்மாணிக்கப்படும் இந்த திட்டம், லக்தனவி நிறுவனம் மற்றும் விண்ட்ஃபோர்ஸ் (WindForce PLC) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான “ரிவிதனவி” தனியார் நிறுவனத்தால் செயல்படுத்தப்படுவதோடு, இந்நாட்டின் வலுசக்தி சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உருவாக்கும் வகையில் திட்டப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்துடன் இணைந்த வகையில், பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பல்வேறு சமூக நல நிகழ்ச்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

அவற்றில் உயர்தர மாணவர்களுக்கான “ரிவி நெண” புலமைப்பரிசில் திட்டம், கொடியாகல அக்கர சீய மற்றும் கம்மல்யாய நீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் நூற்று முப்பத்தைந்து வீடுகளை உள்ளடக்கிய வகையில் நீர் வசதிகளை வழங்கும் திட்டம், முத்தாவல குளத்தை (முத்தகண்டிய குளம்) புனர்நிர்மாணம் செய்தல், எத்திமலை இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையில் இயங்கும் தொழில்துறை மின் தொழில்நுட்ப வல்லுநர் பாடநெறியை NVQ Level 4 ஆக மேம்படுத்துவதற்கான வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும்.

நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, இந்த திட்டம் இந்நாட்டின் வலுசக்தி துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாகும் என்றார். மேலும், இந்த திட்டம் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறையில் நிரூபித்த ஒரு சந்தர்ப்பமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் வலுசக்தி பாதுகாப்பு குறித்த அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, முதலீட்டாளர்களின் ஆதரவு மற்றும் அனுபவத்துடன் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதே நோக்கம் என்று தெரிவித்த அமைச்சர் குமார ஜயகொடி, தற்போதைய அரசாங்கம், கூறியதை செயலில் காட்டும் அரசாங்கம் என்றும், இந்நாட்டின் வலுசக்தித் துறையின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் வலியுறுத்தினார்.

நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டாரவும் இதன்போது தனது கருத்துக்களைத் தெரிவித்ததுடன், நமது நாட்டில் வலுசக்தி சுதந்திரத்தை அடைய போதுமான வலுசக்தி மூலங்கள் உள்ளன என்றும், அந்த வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம், வலுசக்தி சுதந்திரத்தை அடைந்தால் வலுசக்தி பாதுகாப்புக் கொண்ட ஒரு நாடு உருவாக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய பொறிமுறையின்படி, இதுபோன்ற ஒரு திட்டத்திற்கான அனுமதிகளை சுமார் 12 நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும் என்றும், கடந்த 6-9 மாதங்களாக ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இந்தச் செயல்முறையை விரைவுபடுத்த பெரும் ஆதரவை வழங்கியுள்ளன என்றும் கூறிய அவர், முதலீட்டாளர்களுக்காக ஒரே கூரையின் கீழ் இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான முறையான பொறிமுறைக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவும், பரிந்துரைகளை வழங்கவும் தயாராக இருப்பதாக மேலும் தெரிவித்தார்.

ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட, உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகள், மொனராகலை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மின்சார சபை மற்றும் நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் அதிகாரிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் கை கோர்த்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!

editor

இலங்கையின் லங்கா பிறீமியர் லீக் தொடரில் – பி-லவ் கண்டி சம்பியனானது.