இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பினை மாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்த ஜனாதிபதி விரும்பினால் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்வோம்.
சர்வசன வாக்கெடுப்பில் ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்சி தொடர்பில் மக்கள் தீர்ப்பொன்றினை வழங்கட்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் 15ஆம் திகதி வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அன்று எம்மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள்.
இன்று அதனை விட மோசமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பெரும்பான்மையுடன் வெற்றி பெறாத சபைகளில் எவ்வாறு ஆட்சியமைக்கப் போகின்றனர் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
அவர்கள் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை. மாறாக தனிநபர்களுடனேயே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பாடுகள் ஏற்படக் காரணமும் அவர் தனிநபர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தமையே ஆகும்.
அவருடனான சந்திப்பிலும் எமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம்.
கடந்த காலங்களில் ஏனைய கட்சிகள் அவற்றின் ஆண்டு நிறைவினை கொண்டாடிய போது ஆற்றிய உரைகளை மக்கள் மீண்டும் கேட்க வேண்டும்.
அவர்கள் நாட்டுக்கு ஆற்றி சேவைகள் தொடர்பிலேயே உரையாற்றினர்.
ஆனால் ஏனைய கட்சிகளைப் பற்றி அரசியல் பேசவில்லை.
முதல் முறையாக மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு கட்சி அதன் ஆண்டு நிறைவு விழாவில் எதிர்தரப்பினரை பழிவாங்கும் நோக்கத்திலான உரைகளை ஆற்றியமை உண்மையில் கவலைக்குரியதாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 6 மாதங்களில் நாட்டுக்கு எவ்வித சேவையும் ஆற்றவில்லை. அதனால் தான் ஏனைய கட்சிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். நாட்டில் அரசியலமைப்பொன்று உள்ளது. அந்த அரசியலமைப்பினை மாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில், சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்வோம். சர்வசன வாக்கெடுப்பிற்கு சென்று மக்களுக்கு தீர்மானிக்கும் உரிமையை வழங்குவோம்.
ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்சி தொடர்பில் மக்கள் தீர்மானிப்பர். நல்லாட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதையே சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்துகின்றோம் என்றார்.
-எம்.மனோசித்ரா