புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மேற்படி அதிகார சபையை இல்லாதொழிக்காமல் அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்திச் செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் குறை நிரப்புத் தொகை மீதான விவாதத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி;
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பில் அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல்வேறு பதில்களை வழங்கியுள்ளது.
எனினும் நாம், இந்த அதிகார சபையை இல்லாதொழிக்க வேண்டாம் என பல சந்தர்ப்பங்களிலும் கூறி வருகிறோம்.
பொருத்தமில்லாத தேவையற்ற நிறுவனங்களை இல்லாதொழிப்பது அல்லது வேறு நிறுவனங்களோடு ஒன்றிணைப்பது தொடர்பில் குழுவொன்றை நியமித்து அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது.
அநாவசிய செலவுகளை மீதப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள அந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும் அந்த பட்டியலில் மேற்படி புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையும் உள்ளடங்குவதே பிரச்சனையாக உள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்கனவே கடிதம் ஒன்றை அனுப்பினேன் அதற்கு ஜனாதிபதியிடமிருந்து 20 நாட்களுக்கு பின்னர்தான் பதில் கிடைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நாம், பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஊடகங்களிலும் எமது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளோம்.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில்10 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் ஒன்றரை இலட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். நாட்டில் அபிவிருத்தியில் பின்தங்கிய சமூகமாகவே அவர்களைக் குறிப்பிட முடியும்.
அதனை கருத்தில் கொண்டு நாம் மிகவும் கஷ்டப்பட்டு எமது அரசாங்கத்தின் காலத்தில் மேற்படி அதிகார சபையை உருவாக்கினோம்.
அனைத்து அமைச்சுக்களுடனும் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு சேவைகளை வழங்குவதற்காகவே அந்த அதிகார சபை உருவாக்கப்பட்டது.
அதனை முறையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமே தவிர அதனை இல்லாதொழிக்கக் கூடாது.எனது வேண்டுகோளை ஏற்று பதிலளித்துள்ள ஜனாதிபதிக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அந்த வகையில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன,மற்றும் பிரதியமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் ஆகியோர் இது தொடர்பில் மாற்றுக் கருத்துகளையே தெரிவிக்கின்றனர். ஜனாதிபதியின் கடிதத்தில் அவ்வாறு ஒரு பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். தவறு இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அதனை சரி செய்ய வேண்டும்.