இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு இன்று காலை (23) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய கைத்தொழில்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பாடசாலைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை வரவேற்கும் வகையில் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில்கள், வர்த்தகங்கள் மற்றும் சேவைக் கலாசாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செயல்படுவதற்காக சமூகத்தை ஊக்குவித்தல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய நோக்கத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு , ‘ அழகான நாடு – புன்னகைக்கும் மக்கள்’ என்ற நோக்குடன் செயல்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில் பிரிவு’, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த அரச நிறுவன பிரிவு’, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த தனியார் துறை பிரிவு ‘, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த பாடசாலைகள்’, ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்ட பிரிவு’, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தாக்கப் பிரிவு’, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படும் அரச சார்பற்ற நிறுவன பிரிவு’, ‘ஊடக பிரிவு’ மற்றும் ‘சமூக ஊடக பிரிவு ‘ ஆகிய 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்க விருதுகளை வழங்கி வைத்தார். அதே நேரத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் மற்றும் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ ஆகியோர் சுற்றுச்சூழல் நட்பு நினைவுப் பரிசொன்றை ஜனாதிபதிக்கு வழங்கினர்.
விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து , விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படத்திலும் ஜனாதிபதி இணைந்து கொண்டார்.
ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, கைத்தொழில்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து அரசாங்கம் ஒரு பொதுவான குறிக்கோளுக்காக பாடுபடும் பட்சத்தில் வெற்றிகொள்ள முடியாத எதுவும் கிடையாது என்று கூறினார்.கைத்தொழில் மற்றும் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த தேவையான ஆய்வு ஆதரவு, ஊக்கம் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்க சுற்றாடல் அமைச்சு உறுதிபூண்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது ஒரு நிறுவனம் அல்லது அமைச்சின் பொறுப்பு அல்ல, மாறாக அது ஒரு கூட்டு மற்றும் தேசிய முயற்சி என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழா வெறுமனே வெற்றியைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் மட்டுமல்லாமல், பசுமையான, தூய்மையான மற்றும் நிலைபேறான நாடாக முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் மாற்றிக் கொள்ள அனைவரையும் கோரினார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினர். சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி மற்றும் சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை என்பவற்றின் சிரேஸ்ட அதிகாரிகள், விருது பெற்றவர்கள் மற்றும் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு