அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதும், புதிய திட்டங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதும் இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. அரச சேவைகளை மிகவும் வலுவாகவும் செயற்திறனுடனும் செயல்படுத்துவதில் முக்கியமான டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் செலுத்த நிதியம் உடன்பாடு தெரிவித்தது.

சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கையில் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் சவுதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

புதிய திட்டங்களுக்கு சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தால் வழங்கப்படும் உதவிகளை, மக்களின் முக்கிய தேவைகளை அடையாளம் கண்டு அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதர் காலித் ஹமூத் நாசர் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani), சவுதி அபிவிருத்தி நிதியத்தின் ஆசிய செயல்பாட்டு பணிப்பாளர் நாயகம் சவுத் அயித் ஆர். அல்ஷம்மாரி (Saud Ayid R. Alshammari) மற்றும் நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி , தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிநாட்டு வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.பி.எஸ். பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

உணவு விஷமானதால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

இருபதுக்கு அமோக வெற்றி