ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் போல் ஸ்டீபன்ஸின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போதும் அதற்குப் பின்னரும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
மேலும், கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய இராஜதந்திரிகள் பலர் இந்நாட்டிற்கு விஜயம் செய்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உயர் ஸ்தானிகர் வழங்கிய ஆதரவைப் பாராட்டினார்.
இந்நாட்டு சுற்றுலா, கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு