“ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் இன்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று மு.ப 11.30 மணி முதல் குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெற்றதுடன், பி.ப 3.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும்.
நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும்.
அத்துடன், “ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று பிற்பகல் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவரும்.