செயலமர்வு தொடர்பில் மாணவிக்கு அறிவிக்க சென்ற அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக, மாணவியின் வீட்டிற்கு சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கபைரப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் இன்று (24) சனிக்கிழமை இடம்பெறவுள்ளதை அறிப்பதற்காக, அதிபரின் உத்தரவுக்கமைய மாணவர்களின் வீட்டிற்கு சென்று அறிவிப்பதற்காக சம்பவதினமான நேற்று (23) மாலை குறித்த ஆசிரியர், மாணவி ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டபோது வீட்டில் சத்தம் கேட்ட நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த மாணவியின் சகோதரன் ஆசிரியரை வாளால் வெட்டி தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்ததையடுத்து, அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்ததையடுத்து அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்டபோது, மாணவியின் சகோதரன் அதிபர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளார்.
இதனையடுத்து வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதாகவும், அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சரவணன்