உள்நாடுபிராந்தியம்

செம்மணி புதைகுழியில் புதிய ஸ்கேன் நடவடிக்கை – மீட்கப்பட்ட பொருட்கள் இன்று காட்சிக்கு!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பகுதியில், தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு புதைகுழிகளுக்கு மேலதிகமாக வேறு மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதனைக் கண்டறியும் நோக்குடன், நேற்று (திங்கட்கிழமை) ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறாததால், பரந்துபட்ட ஸ்கேன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும், ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைக்கழகம் ஊடாகப் பெற்று, நேற்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மீட்கப்பட்ட பொருட்கள் இன்று காட்சிக்கு:

அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களைப் பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில், இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு இந்தச் சான்றுப் பொருட்களைப் பார்வையிட முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகள், செம்மணிப் புதைகுழி தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணரவும், நீதிக்கான தேடலை முன்னெடுக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம் திங்கட்கிழமை , புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 06 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 61 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 30 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் நேற்றைய தினம் வரையில் 61 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 39 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 06 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 126 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 135 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நேற்றைய திங்கட்கிழமை செம்மணியில் தற்போதுள்ள 2 மனித புதைகுழிகளை விட அயலில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா என்பதனை ஆராயும் நோக்கில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஸ்கான் நடவடிக்கை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளதுடன் , ஸ்கான் நடவடிக்கை குறித்தான அறிக்கை யாழ் . நீதவான் நீதிமன்றில் பரப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அத்துடன் இன்றைய தினம் (5) செவ்வாய்க்கிழமை மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காணும் வகையில் அவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்

editor

பொலிஸார் முன்னிலையில் மேலதிக உதிரிப் பாகங்களை உடைத்து எறிந்த முச்சக்கரவண்டி சாரதி

editor