அரசியல்உள்நாடு

சுற்றுலாத் தலைவர்களின் மாநாடு ஜனாதிபதியின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவு

2025 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) ஏற்பாடு செய்த International Tourism Leaders’ Summit, “சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்” எனும் தொனிப்பொருளின் கீழ், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வி வல்லுநர்கள், உலகளாவிய பங்குதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

மாநாட்டின் தொடக்கத்தில் வரவேற்புரை நிகழ்த்திய சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவப் பட்டதாரிகள் சங்கத்தின் (AATEHM) தலைவர் நிஹால் முகந்திரம், இந்த முயற்சி சுற்றுலாத் துறையிலும் அதன் வளர்ச்சியிலும் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்துள்ளதாக தெரிவித்தார்.

உலகின் முதன்மையான சுற்றுலா தலமாக மாறுவதற்குத் தேவையான அனைத்து வளங்களும் இலங்கையிடம் இருப்பதாக அவர் கூறினார்.

தெற்காசியாவில் கொழும்பை வணிக மையமாக மாற்ற வேண்டும் எனவும், உலக சுற்றுலாத் தினத்துடன் இணைந்து நடத்தப்படும் Colombo Travel Mart திட்டத்தை அநந்த முயற்சியின் ஒரு பகுதியாக கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

“தொழில் சந்தை உள்ளிட்ட பல திட்டங்களை ஒழுங்கு செய்யவும் அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்யவும் எம்மால் முடிந்துள்ளது. இதன் மூலம், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நிபுணர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

சுற்றுலாத் துறை மூலம் அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும். அனைத்து தரப்புகளினதும் ஆதரவுடன் சுற்றுலாத் துறையை அதன் அதிகபட்ச நிலைக்கு நாம் அனைவரும் இணைந்து மேம்படுத்த வேண்டும்.” அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுரங்க சில்வாவும் இந்த நிகழ்வில் உரையாற்றினார். அவர் கருத்து தெரிவிக்கையில், இது வெறும் ஒரு மாநாடு மட்டுமல்ல, மாறாக சுற்றுலாத் துறை பயணிக்கும் திசையைப் பிரதிபலிக்கும் ஒரு பாரிய முயற்சி என்றார்.

சுற்றுலாத் துறையில் இளைஞர்கள் நுழைந்து அதன் வளர்ச்சிக்கு பங்களிக்க ஊக்குவிப்பது மிகவும் முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“எந்தவொரு துறையின் வளர்ச்சிக்கும், அதனுடன் தொடர்புடைய அறிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.

அந்த நோக்கத்தை மனதில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆராய்ச்சித் திட்டமும் பாடசாலை சுற்றுலா ஒன்றிய போட்டிகளும் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. கோவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு சுற்றுலாத் துறை பங்களித்துள்ளது.

சுற்றுலாத் துறையின் எதிர்கால சவால்கள், புதிய அறிவு, திறன்கள் மற்றும் தரவு அடிப்படையிலான உத்திகளுடன் சுற்றுலாத்துறையை வெல்ல வேண்டும்.

கல்வி நிபுணர்களின் பங்களிப்பைப் பெறுவது மிகவும் முக்கியம்.” அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு நீண்டகால திட்டத்தின்படி செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உரையாற்றிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற சமூகம் இணைந்து செயல்படுவதன் அவசியம் தொடர்பாக விபரித்தார்.

“பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் சுற்றுலாத் துறையின் மூலம் தொழில்முறை, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை அடைய முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து மாறிவரும் உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப சுற்றுலாத் துறையைப் பேணி பாதுகாக்க வேண்டியதும் மிகவும் முக்கியம்.” அவர் மேலும் தெரிவித்தார்
இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகின்ற நாடுகளுக்கு அந்தந்த மொழிகளிலேயே பாராட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ், இத்தாலி மற்றும் கனடா ஆகியவை அவற்றில் அடங்கும்.

இதைத் தொடர்ந்து சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களுடன் அறிவார்ந்த கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

சுயாதீன வணிக விமானப் போக்குவரத்து ஆலோசகரும் ஸ்ரீலங்கன்-எமிரேட்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான பீட்டர் ஹில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபையின் (SLTDA) தலைவர் புத்திக ஹேவாவசம், ஷாங்க்ரி-லா குழுமத்தின் கீரன் டுவோமி மற்றும் சுற்றுலா ஆலோசகர் மிகுவல் குனாட் ஆகியோர் இங்கு கருத்து தெரிவித்தனர்.

ஜோன் கீல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த திலீப் முத்ததெனிய கலந்துரையாடலை வழநடத்தினார்.

இணைப்பு, போட்டித்தன்மை, உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான உத்திகள் மற்றும் பல பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டன.

தெற்கு சுற்றுலாப் பகுதியில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தனியார் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட “Ruhunu Ring” திட்டத்தின் தொடக்க விழாவும் அங்கு நடைபெற்றது.

“Culturally Wild” என்ற கருப்பொருளில் இயங்கும் இந்த திட்டம், யால மற்றும் உடவலவே தேசிய பூங்காக்கள், சிங்கராஜ மழைக்காடுகள், அறுகம்பே, மிரிஸ்ஸ, காலி, கோட்டை, கதிர்காமம் போன்ற பல சுற்றுலா தலங்களை இணைக்கிறது.

இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் பாரம்பரியமாக செல்லும் இடங்களுக்கு அப்பால் சென்று உள்ளூர் சமூகத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் புதிய சுற்றுலா அனுபவத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள யசஸ் ஹேவகே கருத்து தெரிவிக்கையில், இந்த திட்டம் வனவிலங்குகள், சமையல், சாகச அனுபவங்கள் மற்றும் விளையாட்டு போன்ற பல அம்சங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். இத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் அங்கு தொடங்கப்பட்டது.

சுற்றுலாத் துறை தொடர்பான கருத்துக்களை பிரபல்யப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘Vision 2 Voice’ சஞ்சிகையையும் இதன் போது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையில், சுற்றுலாத் துறை அனைவரும் பயனடையும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல, அனைத்து மாகாணங்களிலும் வாழும் மக்களுக்கும் அதன் நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்வதும், துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதும் மிகவும் முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.

சிறியளவிலான தொழில்முயற்சிகள், , கலைஞர்கள் மற்றும் உள்ளூர் சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சுற்றுலாத் துறையை வளர்ப்பது அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் எனவும் இதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக இலங்கையில் தங்கி அர்த்தமுள்ள வேலைகளில் ஈடுபட வாய்ப்பு இருக்க வேண்டும்.

சுற்றுலாத் துறையினால் அந்த வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கான பயிற்சி மற்றும் கல்வியை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

சுற்றுலாத் துறை என்பது அந்நியச் செலாவணி மட்டுமல்ல; அது நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற சகலதுடனும் தொடர்புபட்டுள்ளது.

இந்தத் துறையை வலுவானதாகவும், நிலையானதாகவும், நியாயமானதாகவும் மாற்ற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டுமென அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.” அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இலங்கை ஒரு முன்னணி சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.

“இந்த அக்டோபரில், இலங்கை சிறந்த சுற்றுலா தலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, இலங்கை பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.

இது நாம் சரியான திசையில் நகர்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், சவால்களை நாம் புறக்கணிக்க முடியாது. முக்கிய பிரச்சனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதுமான திறன் இல்லாதது.

இது ஆண்டுதோறும் ஆறு மில்லியன் பயணிகளைக் கையாள வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்த எண்ணிக்கை இப்போது 10 மில்லியனைத் தாண்டியுள்ளது.

சரியான நேரத்தில் புதுப்பிப்புகள் இல்லாதது ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பிராண்டிங் மற்றொரு சிக்கலாக அடையாளம் காணலாம்.

இலங்கைக்கு ஒரு வலுவான உலகளாவிய பிராண்டிங் திட்டம் தேவை. இதன் மூலம், உலகளாவிய சுற்றுலாத் துறையில் அது ஒரு போட்டி இடமாக மாற முடியும்.”அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பேராசிரியர் சுரங்க சில்வா மற்றும் புகழ்பெற்ற தொழில்முறை நிபுணர் சந்திரா விக்ரமசிங்க ஆகியோருக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

அதை தொடர்ந்து அகில இலங்கை பாடசாலை சுற்றுலா ஒன்றிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி வெற்றிக் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் தொடரின் இறுதிக் கட்டமாக இந்த மாநாடு நடைபெற்றது. சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை (SLTDA), இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கம் (THASL), இலங்கை உள்நாட்டு சுற்றுலா வழிநடத்துனர்கள் சங்கம் (SLAITO), சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவப் பட்டதாரிகள் சங்கம் (AATEHM) மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிலைப்பேறானச் சுற்றுலா பிரிவு ஆகியவை இந்த ஆண்டு உலக சுற்றுலா தின நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தன.

Related posts

BREAKING NEWS – எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – வெளியான புதிய அறிவிப்பு

editor

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இருவருக்கு விளக்கமறியல்!

போலி நாணயத்தாள்களுடன் 52 வயதுடைய பெண் ஒருவர் கைது

editor