அரசியல்உள்நாடு

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு – பிரதமர் ஹரிணி

சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகமும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் அத்தகைய சமூகத் தேவைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 5 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை மருத்துவ சபையின் (SLMC) நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நூற்றாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து, ஒரு உத்தியோகபூர்வ நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், “இது மக்களுக்கும், மருத்துவத் துறைக்கும், நமது நாட்டுக்கும் 100 வருட சேவை நிறைவைக் கொண்டாடும் சந்தர்ப்பம் மட்டுமல்ல. மருத்துவவியலில் நாம் உயிர்களுடன் பணியாற்றுவதால், இந்த பொறுப்பு மிகவும் தீர்க்கமானது.

கடுமையான சவால்களுக்கு மத்தியிலும், கோவிட் பெருந்தொற்றின் போது மருத்துவ சேவை வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, இலங்கை சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது.

நமது மருத்துவக் கல்வியின் மூலம், மேலும் மனிதாபிமானமுள்ள, உணர்வுபூர்வமான, நெறிமுறை சார்ந்த முழுமையான மருத்துவர்களை உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றிக் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை அடைந்ததற்காக இலங்கை மருத்துவ சபைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றுபோல் எதிர்காலத்திலும் உங்களுடன் இணைந்திருப்பதில் அரசாங்கம் பெருமை கொள்கிறது,” எனத் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், “நமது சுகாதார சேவை புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கும் காலத்திலேயே நாம் இருக்கிறோம். பழைய உறுதிப்பாடுகள் புதிய சிக்கலான விடயங்களுக்கு வழி வகுக்கின்றன. நாம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, டிஜிட்டல்மயமாக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, மரபணு மருத்துவவியல் மற்றும் நாடுகளுக்கு இடையேயான மருத்துவ சேவை வழங்குதலை நோக்கிப் பயணிக்கும்போது, ஒழுங்குபடுத்தல் அதனுடன் முன்னேற வேண்டும். இலங்கை மருத்துவ சபை இந்த அழுத்தங்களைத் தாங்கி நிற்கவில்லை, உண்மையில் நாம் அதன் மத்தியிலேயே இருக்கிறோம்.

மருத்துவத் தொழிலை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்லாமல், இலங்கையில் சுகாதார சேவைகளை வழங்குவதன் நோக்குநிலையை வடிவமைப்பதிலும் சுகாதார அமைச்சு இலங்கை மருத்துவ சபையை ஒரு முக்கிய பங்காளி எனக் கருதுகிறது.

பல வருடங்களாக, உரிமம் வழங்குதல், கல்வித் தரநிலைகள், தொழில்முறை மேம்பாடு பராமரித்தல், நெறிமுறை மேற்பார்வை மற்றும் சுகாதாரப் பணியாளர் திட்டமிடல் போன்ற விடயங்களில் நாம் ஒன்றாகப் பணியாற்றியுள்ளோம்.

இவை சிறிய பணிகள் அல்ல – நமது குடிமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையின் தரம், பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது என்பதை இந்த விடயங்களே தீர்மானிக்கின்றன.” என்றார்.

இக்கூட்டத்தில் தூதுவர்கள், சட்ட மா அதிபர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், இலங்கை மருத்துவ சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பங்கேற்றனர்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் விசேட சந்திப்பு

editor

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி வெளியானது

மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்கும் பிரியாந்தினி?