சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த 21 ஆம் திகதி முதல் இன்று 27 ஆம் திகதி காலை வரை ஏற்பட்ட பல்வேறு அனர்த்த சூழ்நிலைகள் காரணமாக இம்மாவட்டத்தில் இதுவரை 192 குடும்பங்களைச் சேர்ந்த 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 18 பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் 12 பிரிவுகளில் அனர்த்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொலன்ன, பலாங்கொடை, ஓப்பநாயக்க, காவத்தை, கொடக்கவெல, வெலிகேபொல, நிவித்திகல, எலபாத்த, அயகம, இம்புல்பே, கலவான மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேசங்களில் அனர்த்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அனர்த்த சம்பவங்கள் பதிவாகியுள்ள கிராம அலுவளர் பிரிவுகளின் எண்ணிக்கை 66 ஆகும்.
அத்துடன் இம்மாவட்டத்தில் 103 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளன.
கற்கள் உருளுதல் மற்றும் மண்சரிவு அபாயங்கள் காரணமாக பலாங்கொடை மற்றும் கொலன்ன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 3 பாதுகாப்பு மையங்களில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 95 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு மையங்களில் ஒன்று கொலன்ன பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொரளுவகெஅயின கிராமசேவர் பிரிவின் பிரஜா சக்தி நிலையத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலங்கொட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெட்டிகல வட்டாரத்தில் உள்ள பெட்டிகல சிங்கள வித்தியாலயத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வலேபொட வட்டாரத்தில் உள்ள எகொட வலெபொட வித்தியாலயத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொலன்ன, பலங்கொடை, இம்புல்பே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் சீரற்ற காலநிலை குறித்து மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்
