அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஐ.நா. உதவி

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிக்கும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரூ உறுதியளித்துள்ளார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மார்க் அண்ட்ரூ ஆகியோருக்கு இடையில் இன்று (08) அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை உடனடி நிவாரண நிதியத்தின் கீழ் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த நிதியை அதிகாரப்பூர்வமாக அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்படும் உதவியின் கீழ் உணவுப் பாதுகாப்பு, வீடமைப்பு, குடிநீர், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதற்காக விரிவான மதிப்பீடொன்றை மேற்கொள்வதற்காக ஏற்கனவே OCHA அமைப்பின் 05 பேர் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனர்த்தம் காரணமாக நாட்டின் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் என அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார். இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவியளிக்கும் நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு நியூயோர்க் மற்றும் ஜெனிவா ஐக்கிய நாடுகள் அலுவலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக மார்க் அண்ட்ரூ இதன்போது தெரிவித்தார்.

Related posts

கொரோனா – இலங்கையில் சுற்றுலா மேற்கொண்ட பகுதிகளை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை

இலங்கை வருகிறார் எலான் மஸ்க்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து கலந்துரையாட படகில் சென்ற ரிஷாட் எம்.பி

editor