சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு சட்டவாக்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமரால் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் குழுவொன்றின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னரே அவரது பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் தொடர்ந்து நீடிக்கும்.
ஆனால், மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் பாராளுமன்ற விவாதங்களின் போது முதலில் பதிலளிக்கும் உரிமை போன்ற சலுகைகளை அவர் இழப்பார் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்று மணிநேர விவாதத்திற்குப் பிறகு, சிங் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது.
ஆனால் தொழிலாளர் கட்சியின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்றும் அந்த ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சட்டவாக்க உறுப்பினர் ரயீஸா கான், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணொருவரிடம் பொலிஸார் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதை தான் கண்டதாக பாராளுமன்றத்தில் தெரிவித்ததே இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
பின்னர் அவர் தனது கூற்று உண்மையல்ல என்பதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பான பாராளுமன்றக் குழுவின் விசாரணையில், சிங் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் இந்த பொய்யான தகவலை அறிந்திருந்த போதிலும், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தியமை தெரியவந்தது.
பின்னர் கான் கட்சியிலிருந்தும் பாராளுமன்றத்திலிருந்தும் இராஜினாமா செய்ததுடன், பொய்யான தகவல்களைக் கூறியமை மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கானின் வழக்கை விசாரிக்கும் போது பாராளுமன்றக் குழுவின் முன் ஆஜராகி சத்தியப்பிரமாணம் செய்து பொய் கூறியமை தொடர்பில் சிங்கிற்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததுடன், அவருக்கு பல்லாயிரக்கணக்கான டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆனால் வழக்கு விசாரணைகள் முழுவதும் தான் நிரபராதி என்று கூறிய சிங், உணர்வுபூர்வமான விடயமொன்றைக் கையாள்வதற்கு கானுக்கு அவகாசம் வழங்கவே வேண்டும் என விரும்பியதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர், அத்தீர்ப்பிற்கு எதிராகச் செய்த மேன்முறையீடும் தோல்வியடைந்தது.
