உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான தகவல்

அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் இருந்து அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நாளைக்கு சுமார் 6,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடத் தேவையான அட்டைகள் இல்லாததால், கடந்த காலத்தில் சுமார் 350,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படாமல் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அச்சிடும் அட்டைகள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், தேங்கிக் கிடக்கும் சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக அச்சிட்டு முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்தது.

அத்துடன், எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 14 நாட்களுக்குள் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டங்களையும் இணைய வழியில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே சில மாவட்டங்கள் இணைய வழியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வேரஹெர தலைமை அலுவலகத்துடன் சேர்த்து ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்ட அலுவலகங்களிலும் சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்காலத்தில் குருநாகல் மாவட்டத்திலும் சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் 10ஆம் திகதி மூடப்படும்

இன்றைய போராட்டத்தில் ஒருவர் பலி