அரசியல்உள்நாடு

சாமர தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பகிரங்க கருத்து தவறானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கையில், சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், மாகாண சபைக்கு சொந்தமான நிலையான வைப்பு நிதிக் கணக்கில் இருந்த பணத்தை காலாவதியாகும் முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்துக்கு 17.6 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு, இவ்வாறு மாகாண சபைகளின் நிலையான வைப்பு நிதியை காலாவதியாகும் முன்னர் திரும்பப் பெறுவதற்கு 2015ஆம் ஆண்டு தான் பிரதமராகப் பணியாற்றிய காலத்தில் திறைச்சேரி ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதாகவும், அந்தச் சுற்றறிக்கைக்கு அமைய சாமர சம்பத் தசநாயக்கவின் செயல் சட்டவிரோதமானது அல்ல என்றும் கூறியிருந்தார்.

ஆனால், குறித்த சுற்றறிக்கை 2016ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று வெளியிடப்பட்டிருந்த போதிலும், சாமர சம்பத் தசநாயக்கவால் பணம் திரும்பப் பெறப்பட்டது 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 29 அன்று எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, சாமர சம்பத் தசநாயக்க பணத்தை திரும்பப் பெற்றபோது, ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடும் சுற்றறிக்கை எதுவும் இல்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், அப்போது அவர் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்ட திகதிகள் குறித்து அறியாமல் ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டமை தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ஊடக சந்திப்பை நடத்தி இந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்கவின் மனைவியின் கோரிக்கையின் பேரில் இந்த ஊடக சந்திப்பை நடத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும், அதன்படி, சந்தேக நபர் விசாரணைகளுக்கு இடையூறு செய்வதால், அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடுமாறு கோரப்பட்டது.

இந்தக் கோரிக்கையை இன்று பிற்பகல் பரிசீலிக்க பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார்.

Related posts

கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன், மருமகன் சடலமாக மீட்பு

editor

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று

சந்தையில் சைக்கிளுக்கும் தட்டுப்பாடு