அரசியல்உள்நாடு

சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலமே மனித உரிமையைப் பாதுகாக்க முடியும் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

அனைத்து பிரிவினைவாதங்களையும் இல்லாதொழித்து சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டில் மனித உரிமையை பாதுகாக்க முடியும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் அனைத்து இன,மத மக்களுக்கும் அதன் பிரதிபலன்கள் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர் அதற்கான வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சபையில் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்பி சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று (21) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

”ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு நாம் செல்லும்போது எமது நாட்டில் நாம் எதிர் நோக்குகின்ற சவால்கள், தீர்மானங்கள் தொடர்பில் ஒரு நாடு என்ற வகையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி பேதம் எதுவுமின்றி ஒன்றாக ஆலோசித்து சரியான தீர்வுகளை, முக்கிய விடயங்களை அங்கு பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஒரு நாட்டின் நீடித்து நிலைக்கும் அமைதிக்கு அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்பு,நீதி, சமத்துவம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பது கட்டாயத் தேவை என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம்.

இந்த சவால்களை எதிர்கொள்வதன் மூலமே ஒரு உண்மையான ஜனநாயக சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை முழுமையாக நம்புகின்ற ஒரு அரசியல் கட்சியே எமது கட்சி.

மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் தொடர்பில் நாம் பேசும்போது அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிந்திக்கும்போது முக்கியமாக பொருளாதார அபிவிருத்தி பற்றி பேச வேண்டியுள்ளது.

அந்தவகையில் ஒரு நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் தமக்கு அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான பொருளாதார உரிமை, சமத்துவத்தை வழங்குவது முக்கியமாகிறது.

நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோமானால் அதில் ஒவ்வொருவருடைய பங்கும் எத்தகையது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். பொருளாதார அபிவிருத்தியில் சமமான பங்கு அனைத்து பிரதேச மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியுடன் உள்ளோம்.

அந்த வகையில் அரசாங்கம் வட மாகாணத்தில் வீதி அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி பெண்கள் தொடர்பான அறிவிருத்தி போன்றவற்றிற்கான திட்டங்களை எமது வரவு செலவுத் திட்டத்தில் நாம் உள்வாங்கியுள்ளோம்.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற வசதிகள் அனைவருக்கும் அவசியம். கல்வி என்பது ஒருவருக்கான தனிப்பட்ட உரிமையல்ல. அந்தவகையில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதிகள் என அனைவருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாம் மலையக மக்களின் பக்கம் கவனம் செலுத்தி உள்ளோம். அவர்களுடைய கல்வி அபிவிருத்தி மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோன்று பின்தங்கிய கிராமங்களில் போக்குவரத்து வசதிகள் மிக முக்கியமானது. அவர்களுடைய உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு போக்குவரத்து முக்கியமாக உள்ளது.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் வடமாகாண அபிவிருத்திக்காக மட்டும் மேலதிகமாக ரூ. 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வட்டுவாக்கல் பாலம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூ. 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் இந்திய வம்சாவளி மக்களாக புறக்கணிப்புக்குள்ளாகியிருந்த மலையக மக்களை இலங்கை பிரஜைகளாக உள்வாங்குவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதன்முறையாக நாம் அதற்கான செயற் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

அந்த மக்களின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்திலும் இதுவரை காலம் இந்திய வம்சாவளி என குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் அவர்கள் இலங்கை மலையக மக்கள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்கள் அதனை நாம் பெருமையுடன் தெரிவிக்க விரும்புகின்றோம்” என தெரிவித்தார்.

Related posts

இன்றும் 145 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

கொரோனா தொடர்பில் போலியான தகவலை வழங்கிய ஒருவர் கைது

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor