உள்நாடு

சப்ரகமுவ மாகாண கூட்டுறவுத்துறைக்கு இணையத்தளம் அறிமுகம்!

சப்ரகமுவ மாகாண கூட்டுறவுத்துறையை இணையவெளியில் (Cyber Space) அறிமுகப்படுத்தும் நிகழ்வு, கடந்த வியாழக்கிழமை (01) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மேற்படி இணையதளத்தை www.dcd.sg.gov.lk என்ற இணையதள முகவரியின் ஊடாக அணுக முடியும்.

இதன் கீழ், சபரகமுவ மாகாண கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான மேலாண்மை தகவல் சம்பந்தமான
படிவங்கள் (COOPMIS), சுற்றறிக்கைகள் மற்றும் விளம்பரங்களைப் பதிவிறக்கம் செய்தல், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராமிய வங்கி விபரங்கள், கூட்டுறவு உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய அமைப்பு (COOP PENSION) போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதோடு, அரச சேவையை மிகவும் வினைத்திறனானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பொதுமக்களுக்கு நெருக்கமாக்குவது இதன் ஒரு நோக்கமாகும்.

அத்துடன் நேரம், உழைப்பு மற்றும் பணம் ஆகிய வளங்களை சிக்கனமாக நிர்வகிப்பதும் இதன் மற்றுமொரு எதிர்பார்ப்பாகும்.

காகிதமற்ற (Paperless) அலுவலகச் சூழலை உருவாக்குவதற்கும் இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் இவ்வாறான டிஜிட்டல் முறையிலான அமைப்பொன்றை முதன்முதலில் இணையவெளியில் வெளியிட்ட பெருமை சபரகமுவ மாகாண கூட்டுறவுத் திணைக்களத்தைச் சாரும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

அரச கரும மொழிக் கொள்கைக்கு இணங்க, மூன்று மொழிகளிலும் இந்த இணையதளத்தை விரைவாக மேம்படுத்துவதற்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனிதா, சப்ரகமுவ மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சுஜீவா போதிமான்ன, சப்ரகமுவ மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளர் நிஷாந்த சமன் குமார, கணக்காளர் பி.டி.ஜே. ஜயந்த, உதவி ஆணையாளர்களான ஈ.கே.எஸ். பெரேரா, ஏ. நிஹால், எஸ்.எஸ்.கே. சமரகோன் உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்

Related posts

இன்று எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு!

பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகமாகிய இலங்கை!

லொத்தர் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்