பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அண்மையில் (22) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இதன்போது கௌரவ சபாநாயகர் பொலிஸமா அதிபருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அரசியலமைப்புப் பேரவையின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமைய, முழுமையான வெளிப்படைத் தன்மையுடனும் இந்த நியமனம் இடம்பெற்றிருப்பதாக சபாநாயகர் இங்கு குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய, எந்தவொரு அரசியல் செல்வாக்கும் இன்றி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், அது தனது உத்தியோகபூர்வ கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது, அத்துடன், வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மிகவும் ஒழுக்கமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என கௌரவ சபாநாயகர் முன்பு விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக பொலிஸ்மா அதிபர் இங்கு தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி, சாரதிகளின் பயணம் தொடங்கும் இடத்திலிருந்து அவர்கள் முடிக்கும் இடம் வரை அவர்களின் வாகனம் செலுத்தும் முறைகள் குறித்த தொடர்ச்சியான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஒழுக்கமான முறையில் வாகனங்களைச் செலுத்திய சாரதிகள் அந்த இடத்திலேயே பாராட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு சாரதிகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் மூலம் ஒழுக்கம் நிறைந்த சாரதிகளை உருவாக்கி, வீதி விபத்துக்களைக் குறைத்து உயிர் இழப்புக்களைத் தடுக்க முடியும் என்றும், இத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் இங்கு நினைவுகூர்ந்தார்.