அரசியல்உள்நாடு

சபாநாயகரின் இல்லத்தை பாராளுமன்ற கற்கைகள் மற்றும் ஆய்வு மையமாக மாற்றுவதற்கு இணக்கம்!

கௌரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை “பாராளுமன்றக் கற்கைகள் மற்றும் ஆய்வு மையமாக” மாற்றுவது தொடர்பான முன்மொழிவுக்கு பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் கொள்கை ரீதியாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய ஆறு மாத ஆரம்ப காலத்திற்குள் குறித்த மையத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், அதற்குத் தேவையான இணைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கும், ஆலோசனை வழங்கவும் ஏனைய பணிகளை வழிநடத்துவதற்கும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரசாங்க அதிகாரி ஒருவரை திட்ட முகாமையாளராக நியமிப்பதற்கும் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 24.07.2025ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த முன்மொழிவு குறித்து ஆராயப்பட்டது.

அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் சட்டமன்ற மற்றும் நிர்வாகத் திறன்களை வலுப்படுத்துவதை முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு, சிறந்த ஆய்வு வசதிகள், சிறப்புப் பயிற்சிகள் மற்றும் கொள்கைப் பகுப்பாய்வுகளை இந்த மையத்தின் ஊடாகப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

உத்தேச மையம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர், பாராளுமன்ற செயலகத்தின் கீழ் செயற்படும் இந்த மையம், முதன்மையாகப் பாராளுமன்றத்தின் நிதியொதுக்கீடுகள் மூலமாகவும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் பொதுநாலவாய பாராளுமன்ற ஒன்றியம் போன்ற சர்வதேச நிறுவனங்களின் கூட்டாண்மையின் மூலமும் நிதியளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.

இதன் நீண்டகால நிலைத்தன்மையை அரசாங்க மானியங்கள், நன்கொடை உதவிகள் மற்றும் விசேட பயிற்சித் திட்டங்களுக்குப் பெறக்கூடிய சாதாரண கட்டணங்களின் ஊடாகப் பராமரிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்னாயக்க, இந்த முன்மொழிவுக்குத் தனது பாராட்டை முன்வைத்தார்.

பாடத்திட்டத் தயாரிப்பு, பாடநெறிகளின் கட்டமைப்பு, கற்கைத் திட்டங்கள், பாட நெறிகளுக்கான நேர ஒதுக்கீடுகள் மற்றும் மதிப்பீட்டு முறைகளைத் தயாரித்தல் போன்ற கல்விசார் நோக்கம் திட்டமிடல் கட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என சபை முதல்வர் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் இந்த மையத்தின் முக்கியத்துவத்தையும், இந்த நோக்கத்திற்காக சர்வதேச மாதிரிகளை ஆய்வுசெய்வதன் முக்கியத்துவத்தையும், இந்த மையத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் கடுமையான நிதி பொறுப்புணர்வை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் சபை முதல்வர் மேலும் வலியுறுத்தினார்.

கௌரவ தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான (கலாநிதி) அணில் ஜயந்த கருத்துத் தெரிவிக்கையில், சட்டமன்ற ஆவணங்கள், ஆய்வுகள் மற்றும் பாராளுமன்ற அறிக்கைகளுக்கான டிஜிட்டல் மற்றும் இயற்பியல் களஞ்சியத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த மையம் பிற சிறப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், குறித்த மையம் சர்வதேச நிறுவனங்கள், மதியுரையகங்கள் மற்றும் அறிவியல் நிறுவுனங்களுடன் திறன் பரிமாற்றம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான மையமாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

Related posts

‘ககன’ வின் உதவியாளர்கள் இருவர் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடிய பொலிஸ் அதிகாரி கைது

editor

ஆட்சி அமைப்பதற்கு இடையூறு அளித்தால் நாமும் அவ்வாறே பதிலடி வழங்குவோம் – ரில்வின் சில்வா

editor