சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று (17) காலை நாரஹேன்பிட்டி பகுதியில் சிறப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டு, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவில் இருந்து அண்மையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் ஒன்றரை மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பறவைகள் பூங்கா வளாகத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 4 கஞ்சா செடிகளுடன், பூங்காவின் முகாமையாளர் மற்றும் களஞ்சியசாலை கட்டுப்பாட்டாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை மற்றும் மித்தெனிய பகுதிகளைச் சேர்ந்த 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.