ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தா அலுவலகம் மீள் நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கு எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தா அலுவலகம் மீள் நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் நான் அவரிடம் வினவினேன். எனினும் தனக்கு எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
இதேபோன்று தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட முன்னரே சமூக வலைத்தளத்தில் நபரொருவர் அந்த தகவலை வெளியிட்டிருந்தார். சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாத விடயங்கள் ஊடகங்களுக்கு தெரியவருகின்றன.
மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் இவ்வாறு தான் செயற்படுமா? இந்த ஜே.வி.பி.யினர் மாகந்துரே மதுஷின் மரண வீட்டுக்கும் சென்றுள்ளனர்.
அதுபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் எவரும் எந்தவொரு பாதாள உலகக் குழுவினருடனும் தொடபுடையவர்கள் அல்ல. ஆனால் அரசாங்கம் தொடர்பினை ஏற்படுத்துமா என்பது எமக்கு தெரியாது.
அரசாங்கம் கூறுவதைப் போன்று எதிர்க்கட்சிகளுக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பிருப்பது உண்மை எனில் அதனை பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.
ஏனைய விடயங்களுக்கு பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம் இந்த விடயத்துக்கும் பட்டியலை வெளியிட வேண்டும்.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் என்றார்.
-எம்.மனோசித்ரா